மதுரையில் இலக்கியத் திருவிழா: அமைச்சர் தியாகராஜன் தகவல்
மதுரையில் இலக்கியத் திருவிழா: அமைச்சர் தியாகராஜன் தகவல்
UPDATED : அக் 13, 2023 12:00 AM
ADDED : அக் 13, 2023 10:25 AM
மதுரை:
இந்தியாவின் பெரிய திருவிழாவான ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா போன்று வரும் ஜனவரியில் மதுரையில் நடக்கவுள்ளது என மதுரை தமுக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கிய புத்தகத் திருவிழாவில் அமைச்சர் தியாகராஜன் பேசினார்.மாவட்ட நிர்வாகம், பபாசி சார்பில் புத்தகக் கண்காட்சி நடக்கிறது. கலெக்டர் சங்கீதா, கூடுதல் கலெக்டர் மோனிகா ரானா, மேயர் இந்திராணி பொன்வசந்த், துணை மேயர் நாகராஜன், வெங்கடேசன் எம்.பி., பபாசி தலைவர் வைரவன் கலந்து கொண்டனர்.அமைச்சர் தியாகராஜன் பேசியதாவது:
உலகின் சிறந்த மனிதர்களும் எழுத்தாளர்களும் எழுத்துகள் மூலம் காலம் கடந்தும் நிலைத்திருக்கின்றனர். இதுவரை தெரியாத புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாகும். புத்தகங்களின் மூலம் கருத்துகளையும் சிந்தனைகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவின் பெரிய இலக்கிய விழாவான ஜெய்ப்பூர் இலக்கிய விழாவை போன்று வரும் ஜனவரியில் மதுரையில் நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றார்.புத்தக கண்காட்சியில் தாமரை பிரதர்ஸ் பதிப்பகத்தின் ஸ்டால் உட்பட 250க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் உள்ளன. இந்த ஆண்டு சிறுவர்களுக்கான சிறப்பு அரங்கங்கள் உள்ளன. அதில் சிறுவர்களுக்கான திரைப்படங்கள், பயிலரங்கம், கதை சொல்லும் நிகழ்ச்சிகள் நடக்கும். அக். 22 வரை காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. தினமும் மாலை 4:00 மணி முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மாலை 6:00 மணி முதல் எழுத்தாளர்கள், கவிஞர்கள் கலந்து கொள்ளும் சிந்தனை அரங்கம் நிகழ்ச்சி நடக்கிறது.அனுமதி இலவசம்.
