UPDATED : அக் 13, 2023 12:00 AM
ADDED : அக் 13, 2023 05:33 PM
மதுரை:
மதுரை காமராஜ் பல்கலையில் நிலவும் நிதித்தட்டுப்பாடால் பேராசிரியர், அலுவலர்களுக்கு செப்டம்பர் மாத சம்பளம் வழங்க முடியாத நிலையில், தமிழக அரசு பல்கலைக்கு ரூ. 4.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.இப்பல்கலையில் 500க்கும் மேற்பட்ட பேராசிரியர், அலுவலர்கள், 1500 ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கு சம்பளம் வழங்க மாதம் ரூ. 10.5 கோடி தேவை. தற்போது நீடிக்கும் நிதிப்பற்றாக்குறை காரணமாக செப்டம்பர் மாத சம்பளம் பல்கலையால் வழங்க முடியவில்லை. இதனால் பேராசிரியர்கள், ஓய்வூதியர்கள் சார்பில் போராட்டங்கள் நடக்கின்றன.இதுகுறித்து பல்கலை தரப்பில் அரசு கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து ரூ.4.35 கோடியை பல்கலைக்கு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளது. இந்நிதியால் பல்கலை நிர்வாகத்திற்கும் மேலும் தலைவலி ஏற்பட்டுள்ளது.பேராசிரியர்கள் கூறியதாவது:
ஓய்வூதியம் ரூ. ஆறரை கோடி, பேராசிரியர், அலுவலருக்கான சம்பளம் ரூ.4 கோடி என மொத்தம் ரூ.10.5 கோடிக்கு மேல் பல்கலைக்கு ஒவ்வொரு மாதமும் நிதி தேவை. ஆனால் அரசு ரூ.4.35 கோடி மட்டும் ஒதுக்கீடு செய்துள்ளது.இதை ஓய்வூதியர்களுக்கு வழங்கலாம் என நிர்வாகம் ஆலோசிக்கிறது. சம்பளம் வழங்கினால் அனைவருக்கும் வழங்குங்கள். ஓய்வூதியர், அலுவலர், பேராசிரியர் என பிரித்து வழங்க வேண்டாம் என எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் பல்கலை நிர்வாகம் முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறது, என்றனர்.
