அமைச்சர் பேச்சில் உடன்பாடு; ஆசிரியர் சங்க ஆர்ப்பாட்டம் ரத்து
அமைச்சர் பேச்சில் உடன்பாடு; ஆசிரியர் சங்க ஆர்ப்பாட்டம் ரத்து
UPDATED : அக் 13, 2023 12:00 AM
ADDED : அக் 13, 2023 11:04 PM
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி, ஆசிரியர் சங்கத்தினர் போராட்டங்களை அறிவித்து வருகின்றனர்.கடந்த மாதம், 28ம் தேதி முதல் சென்னை டி.பி.ஐ., வளாகத்தில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் உள்ளிட்ட மூன்று சங்கத்தினர் நடத்திய தொடர் போராட்டம், அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.அமைச்சர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் தரப்பில் பேச்சு நடத்தி, சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்பின்னும் போராட்டத்தை தொடர்ந்த ஆசிரியர்களை, குண்டுக்கட்டாக கைது செய்து, சென்னையை விட்டு போலீசார் வெளியேற்றினர். இந்நிலையில், டிட்டோஜாக் என்ற ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பில், 11 சங்கங்கள் சேர்ந்து, டி.பி.ஐ., வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, நேற்று காலை, 8:00 மணிக்கு பேச்சுக்கு வரும்படி சங்க நிர்வாகிகளுக்கு அமைச்சர் மகேஷ் அழைப்பு விடுத்தார். ஆனால், ஆசிரியர் சங்கத்தினர் பேச்சுக்கு செல்லாமல் புறக்கணித்தனர். இதனால், அமைச்சரும், அதிகாரிகளும் ஏமாற்றம் அடைந்தனர். அதன்பின், ஆசிரியர் சங்கத்துடன் பேச, நாள் முழுதும் வீட்டின் கதவு திறந்தே இருக்கும் என, அமைச்சர் அறிவித்தார்.இதையடுத்து, ஆசிரியர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள், நேற்று மாலை அமைச்சர் வீட்டுக்கு சென்றனர். அமைச்சர் மகேஷ், பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர், சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினர். பின் வெளியே வந்த ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 30ல், 11 கோரிக்கைகள் ஏற்று கொள்ளப்பட்டதாக அறிவித்தனர்.அதனால், டி.பி.ஐ., வளாகத்தில் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டு, ராஜரத்தினம் மைதானம் அருகே விளக்க கூட்டமாக நடக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பால், டி.பி.ஐ., வளாகம் மீண்டும் போராட்ட களமாகாமல் தப்பியதாக, போலீசாரும், கல்வி அதிகாரிகளும் நிம்மதி அடைந்தனர்.
