UPDATED : அக் 14, 2023 12:00 AM
ADDED : அக் 14, 2023 05:34 PM
மதுரை:
அறிவுக்கு ஆயிரம் கண்கள் என்று சொல்வதைப் போல மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும் புத்தக கண்காட்சியில் விருப்பமான புத்தகங்களை தேர்வு செய்யும் இளையோர் கூட்டம் அதிகரித்துள்ளது.மாவட்ட நிர்வாகம், பபாசி சார்பில் அக்., 22 வரை தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம். மாலை 4:00 மணி முதல் மாணவர்களுக்கான போட்டி, கலை நிகழ்ச்சிகளும், மாலை 6:00 மணி முதல் எழுத்தாளர்கள், கவிஞர்களின் சிந்தனை அரங்க நிகழ்ச்சியும் நடக்கிறது.குழந்தைகளைத் தேடும் புத்தகங்கள்
கண்காட்சியில் 250 ஸ்டால்கள் உள்ளன. ஒவ்வொன்றிலும் அறிவியல், அதிசயம், அழகிய காட்சிகள், படக்கதைகள், ஓவியங்கள், நல்லொழுக்க போதனைகள் என குழந்தைகளுக்கான ஏதோ ஒரு புத்தகம் காத்திருக்கிறது. குழந்தைகளின் உலகத்தை தொட முயன்ற எழுத்தாளர்களின் சிந்தனை வியக்க வைக்கிறது. அலைபேசி உலகில் புத்தகத்தை படிப்பது யார் என்று அலட்சியமாக கடந்து செல்ல முடியாத படி, புத்தக கண்காட்சி இளைஞர்களை கட்டிப் போட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.தினமலர் தாமரை பிரதர்ஸ் பதிப்பகம் சார்பில் எழுத்தாளர்கள் இந்திரா சௌந்தர்ராஜன், ஜி.வி. ரமேஷ்குமார், ஆர்னிகா நாசர், திருப்பூர் மதிவண்ணன், ஆதலையூர் சூரியகுமார், ஹேமா பாஸ்கர் ராஜூ, வரலொட்டி ரங்கசாமி, ஷியாம், ராஜாராம், ஆர்.வி.பதி, ராஜசேகரன், சந்திரசேகரன், ரஜத், வெங்கட் சுப்பிர மணியம், முத்தாலங்குறிச்சி காமராசு, மோகன்தாஸ் எழுதிய புத்தகங்கள் இங்குள்ளன. அந்துமணியின் பார்த்தது கேட்டது படித்தது 15 பாகங்களும், சமஸ் எழுதிய சோழர்கள் இன்று புத்தகம், மகா பெரியவா தொகுதிகள், பொன்னியின் செல்வன் புத்தகத் தொகுதிகள், ஆன்மிக, அறிவியல், நவீன கதை புத்தகங்கள் இங்குள்ளன. இளையோர்கள் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை தேடித்தேடி வாங்கினர்.
