பேனா வடிவில் போதை பொருள்: பள்ளிகளை சுற்றி கண்காணிப்பு
பேனா வடிவில் போதை பொருள்: பள்ளிகளை சுற்றி கண்காணிப்பு
UPDATED : அக் 16, 2023 12:00 AM
ADDED : அக் 16, 2023 10:09 AM
சென்னை:
பேனா வடிவ போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பள்ளிகளின் அருகே போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.தமிழகத்தில் சமீபகாலமாக பேனா வடிவில் போதை பொருட்கள் விற்கப்படுவதாக, கல்வி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளன. அவற்றை வாங்கி மாணவர்கள் உறிஞ்சுவதால் போதைக்கு அடிமையாகின்றனர்.இதுகுறித்து, கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் ஆலோசனைப்படி, பள்ளிகளில் போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளிலும், சுற்றுப்புற பகுதிகளிலும், போதை பொருள் பயன்பாட்டை தடுக்கும் வகையில், போலீசார் கண்காணிப்பை பலப்படுத்த, கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுஉள்ளனர்.போலீசார், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு, போதை பொருள் பயன்பாடு ஒழிப்பு நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளன. பள்ளி வளாகம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் உள்ள கேன்டீன்களை கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
