UPDATED : அக் 17, 2023 12:00 AM
ADDED : அக் 17, 2023 09:52 AM
சித்தாமூர்:
சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில், 51 ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளிகள், 23 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், 8 அரசு உயர்நிலைப் பள்ளிகள், 7 மேல்நிலைப் பள்ளிகள், 9 ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் என, மொத்தம் 98 பள்ளிகள் செயல்படுகின்றன.பள்ளியில் பயிலும் 1 - 10ம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு, மதிய வேளையில், சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது. சத்துணவு மையங்களில் உணவு சாப்பிடும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப்பள்ளி மாணவருக்கும், தினமும் தலா 100 கிராம் அரிசி வழங்கப்படுகிறது.ஆறு முதல் 10ம் வகுப்பு வரையிலான வரை மாணவர்களுக்கு 150 கிராம் அரிசி, அனைவருக்கும் தினமும் 15 கிராம் பருப்பு, 3 கிராம் சமையல் எண்ணெய், ஒரு முட்டை என கணக்கிட்டு உணவு வழங்கப்படுகிறது. விறகு, மளிகை, காய்கறி செலவினங்களுக்கு, ஒரு மாணவருக்கு தலா 1.70 ரூபாய் பணமாக சத்துணவு அமைப்பாளருக்கு வழங்கப்படுகிறது.அமைப்பாளர்கள், மாணவர்கள் வருகைக்கு ஏற்ப சாப்பாடு தயார் செய்வது, சாத வகைகளை தேர்வு செய்வது, உணவுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வது, தரத்தை பரிசோதிப்பது என, பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு மையத்திற்கும் தலா ஒரு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் இருக்க வேண்டும்.சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளி சத்துணவு மையங்களில், போதிய சமையலர்கள் இருந்தாலும், சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள் பெரும்பாலும் கிடையாது. பணி ஓய்வு, இறப்பு போன்ற காரணங்களால் ஏற்பட்ட, 50 சத்துணவு அமைப்பாளர், 57 உதவியாளர்கள் என, மொத்தம் 107 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.இதனால், ஒரே சத்துணவு அமைப்பாளர், ஒன்றிரண்டு பள்ளிகளையும் கூடுதலாக கவனிக்க வேண்டியுள்ளது. ஒரு அமைப்பாளர், பல மையங்களுக்கு செல்வதாலும், சில மையங்கள் அதிக தொலைவில் இருப்பதாலும், கூடுதல் போக்குவரத்து செலவு, உடல் சோர்வு ஏற்படுவதால், அவர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர்.எனவே, சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் நிரப்பப்படாமல் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு வருகிறது.
