UPDATED : அக் 17, 2023 12:00 AM
ADDED : அக் 17, 2023 05:12 PM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் கைடு புத்தகம் வாங்க வற்புறுத்துவதுடன், விழா நடத்த பணம் வசூலிப்பதால் மாணவ, மாணவிகள் குமுறுகின்றனர்.கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி படிக்கும் மாணவ, மாணவிகள் நேற்று கலெக்டரிடம் அளித்த புகார் மனு:
தமிழ்த்துறை பேராசிரியர், தமிழ் பாடம் நடத்தும் அனைத்து துறைகளிலும், கைடு புத்தகத்தை வற்புறுத்தி விற்பனை செய்கிறார். ஏற்கனவே கைடு புத்தகம் இருக்கிறது என தெரிவித்தால், பரீட்சை எழுத விடமாட்டோம், இன்டர்னல் மார்க்கை குறைப்போம் என மிரட்டுகின்றனர்.அதிலும், கைடு புத்தகத்திற்கு உடனடியாக பணம் கொடுக்காவிட்டால், நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் 10 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும், தமிழ்துறை சார்பில் ஏற்பாடு செய்யும் விழா செலவுக்காக, தமிழ்த்துறையில் பயிலும் மாணவர்களிடமிருந்து ரூ.300 முதல் 500 வரை வசூலிக்கின்றனர்.அதேபோல், பி.காம்., மற்றும் எம்.காம்., பயிலும் மாணவர்களிடம் புத்தகம் வாங்க வேண்டும் என மிரட்டி, ரூ.3 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். எனவே, அரசு கல்லுாரியில் புத்தகம், கைடு புத்தகம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
