UPDATED : அக் 17, 2023 12:00 AM
ADDED : அக் 17, 2023 05:13 PM
விழுப்புரம்:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் சட்டப் படிப்பு பயில அரசால் நடத்தப்படும் சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படும் என கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தோருக்கு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் தாட்கோ மூலம் வழங்கப்படுகிறது. இதன் மூலம், சட்ட பல்கலையில் சட்டப்படிப்பு பயில அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட உள்ளது.இந்த பயிற்சி பெற, 18 வயது முதல் 25 வயது நிரம்பிய பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இந்தாண்டு பிளஸ் 2 பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை இணையதளம் மூலமும், தேர்வு நடக்கும் முறை நேரடியாகவும் நடக்கும்.பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களும், சட்டப்படிப்பு பயில ஏனைய நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். பொது நுழைவு தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவு தேர்வுக்கான பயிற்சி வெற்றிக்கரமாக முடிந்தால் அடுத்த கட்ட தேர்வுகள் நேர்காணல், குழு விவாதம், எழுத்து தேர்வு ஆகியவற்றிற்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.இந்த தேர்வுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதியலாம். பயிற்சி கட்டணம் தாட்கோ மூலம் வழங்கப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
