UPDATED : அக் 18, 2023 12:00 AM
ADDED : அக் 18, 2023 04:48 PM
மதுரை:
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்றார் மகாத்மா காந்தி. ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில். நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னை சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன் என்றார் ஆபிரகாம் லிங்கன்.ஒரு புத்தகத்தை ஆர்வமுடன் படிக்கும் பொழுது நம் மனம் முதலில் ஒருமுகப்படுகிறது. வார்த்தைகளின் அர்த்தங்கள் கற்பனையில் காட்சிப்படுத்தப்படுகின்றன. புதிதாய் ஓர் உலகத்தில் நாம் சஞ்சரிக்கும் எண்ணம் ஏற்படுகிறது. அந்த நிகழ்வுகளைச் சுற்றியே நம் எண்ணங்கள் ஓடுகிறது .எப்பொழுது அந்த புத்தகத்தைப் படித்து முடிப்போம் என்ற விறுவிறுப்பு மனதிற்குள் ஏற்படுகிறது.படைப்பாளிகளின் பல நாள் அனுபவங்களை ஒரு சில மணி நேரங்களில் நாம் பெற்றுவிட்ட மன நிறைவு கிடைக்கிறது. படிக்கும் புத்தகங்கள் ஏதோ ஒரு வகையில் நம் வாழ்நாள் முழுவதும் நம் கூடவே பயணிக்கின்றன.ஒவ்வொருவரும் தங்கள் அனுபவத்தால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும் என்றால் அதற்கு நமக்கு வயது போதாது. வாழ்ந்தவர்கள் எழுதிய புத்தகங்களை உணர்வோடு படித்தால் அவர்களின் அனுபவங்களை பெற்று விடலாம். வரலாறு படிக்கும் போது அந்த காலத்திற்கு நம்மை கொண்டு செல்லும், கவிதைகளை வாசிக்க காதல் ஊற்றெடுக்கும், ஆன்மிகத்தை அறியும் போது ஞானம் பிறக்கும், வான்வெளியைப் படிக்கும் போது நிலவுக்கு சென்று வந்த உணர்வு வரும்.மதுரை தமுக்கம் மைதானத்தில் பபாசி,மாவட்ட நிர்வாகம், பொது நுாலகம் இயக்கம் சார்பில் அக்., 22 வரை காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை புத்தக கண்காட்சி நடந்து வருகிறது. மாலை 4:00 முதல் மாணவர்களுக்கான போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும், 6:00 மணிக்கு முதல் சிந்தனை அரங்கில் எழுத்தாளர்கள், கவிஞர்களின் சிந்தனை நிகழ்ச்சிகள் நடைபெறகிறது.
