பார்ப்போர் அதிகம்; வாங்குவோர் குறைவு; புத்தக மேளாவில் வருத்தம்
பார்ப்போர் அதிகம்; வாங்குவோர் குறைவு; புத்தக மேளாவில் வருத்தம்
UPDATED : அக் 19, 2023 12:00 AM
ADDED : அக் 19, 2023 04:57 PM
மைசூரு:
மைசூரு தசராவின், புத்தக மேளாவில் புத்தகங்களை பார்வையிடுவோர் அதிகம். ஆனால் வாங்குவோர் குறைவு. மக்களிடம் படிக்கும் ஆர்வம் குறைந்ததால், இலக்கியவாதிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.இதற்கு முன்பு, இலக்கிய மாநாடு, தசரா வந்தால் புத்தக பிரியர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. விற்பனையாளர்களுக்கும் நல்ல லாபம் கிடைத்தது. தற்போது, சூழ்நிலையே மாறியுள்ளது. மக்களுக்கு படிக்கும் ஆர்வம் குறைந்துள்ளது.புத்தக கண்காட்சி
மைசூரு தசராவில், ஆறு ஆண்டுகளாக புத்தக கண்காட்சி நடக்கிறது. ஆனால் புத்தக கண்காட்சிக்கு வருவோரின் எண்ணிக்கை குறைகிறது; வாங்குவோர் எண்ணிக்கை அதைவிட குறைகிறது.மைசூரு நகரின், மத்திய பகுதியான ஓவல் மைதானத்தில், இம்முறை புத்தக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விசாலமான இடத்தில், வாகன பார்க்கிங் பிரச்னை இல்லை. அனைத்து வசதிகள் இருந்தும், பொதுமக்கள் புத்தக கண்காட்சிக்கு வரவில்லை. சிலர் வந்தாலும், சுற்றிப்பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.எட்டு லட்சம் புத்தகங்கள்
மக்களை ஊக்குவிக்கும் நோக்கில், சில கடைகளில் 50 சதவீதம் தள்ளுபடி விலையில், புத்தகங்கள் விற்கப்படுகின்றன. மாணவர்கள், சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள், மூத்த குடிமக்கள் கண்காட்சிக்கு வருகின்றனர்.அனைத்து விதமான புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. ஆனால் வாங்குவதில் ஆர்வம் காண்பிப்பதில்லை. இதனால் இலக்கியவாதிகள் வருத்தம் அடைந்துள்ளனர். புத்தக கண்காட்சியில் கடை வைத்துள்ளவர்கள் கூறியதாவது:
காலை, மாலையில் புத்தக பிரியர்கள் வருகின்றனர். பலரும் புத்தகங்களை பார்க்கின்றனரே தவிர, வாங்குவது இல்லை. எட்டு லட்சம் புத்தகங் களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். மூத்த குடிமக்கள், தங்களின் பேரப்பிள்ளைகளுக்கு பரிசளிக்க, கதை புத்தகங்கள் வாங்குகின்றனர்.கலை, இலக்கியம், மருத்துவம், அறிவியல், விளையாட்டு, சுயசரிதை, ஆயுர்வேதம், கதை, கவிதை புத்தகங்கள், போட்டி தேர்வு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் என, பல்வேறு புத்தகங்கள் உள்ளன. இதுவரை 10 சதவீதம் புத்தகங்கள் மட்டுமே விற்பனையாகின. வரும் 23 வரை, புத்தக மேளா இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
