மருத்துவப் படிப்பு: மத்திய அரசுக்கு முதல்வர் ரங்கசாமி கோரிக்கை
மருத்துவப் படிப்பு: மத்திய அரசுக்கு முதல்வர் ரங்கசாமி கோரிக்கை
UPDATED : அக் 20, 2023 12:00 AM
ADDED : அக் 20, 2023 10:39 AM
புதுச்சேரி:
புதுச்சேரியில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி நிர்ணயித்த காலக்கெடு முடிந்துள்ள சூழ்நிலையில், சிறப்பு அனுமதி கேட்டு முதல்வர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு செப்.30ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும் என மருத்துவக் கலந்தாய்வு கமிட்டி உத்தரவிட்டுள்ளது.முடிவடைந்த காலக்கெடு
இதன்படி, அனைத்து மாநிலங்களிலும்மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கு கவுன்சிலிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் இன்றுவரை எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு மூன்று கட்ட கவுன்சிலிங் தான் முடிந்துள்ளது. அதேபோல, பல் மருத்துவப் படிப்புகளுக்கு அக்.15 ம் தேதியுடன் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும். அந்த காலக்கெடுவும் முடிந்து விட்டது.ஆனால், இறுதிகாலக்கெடுவுக்கு பிறகும் சென்டாக் நிர்வாகம் கவுன்சிலிங் நடத்தி, மருத்துவப் படிப்புகளில் மாணவர்களுக்கு சேர்க்கை ஆணையை வழங்கி வருகின்றது. இந்த மாணவர் சேர்க்கை ஆணை சட்டப்படி செல்லுமா தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமா என பெற்றோர் மத்தியில் குழப்பமும் கலக்கமும் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் மருத்துவ கல்லுாரியில் சேர்ந்து வருகின்றனர்.தாமதம் ஏன்
இந்தாண்டு புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதற்கான அனுமதியை, மத்திய அரசு காலதாமதமாக அளித்தது. அதனால், மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் தள்ளிப் போனது.இந்த காரணத்தை சுட்டிக்காட்டி, தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, சுகாதார துறை செயலர் முத்தம்மா ஆகியோர் மாணவர் சேர்க்கைக்கு தனித்தனியே சிறப்பு அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினர். ஆனால் இந்த இரண்டு கடிதங்களுக்கும் மத்திய அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை.முதல்வர் கடிதம்
இந்நிலையில், புதுச்சேரியில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி கேட்டு, முதல்வர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு இந்தாண்டு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி கிடைப்பது தள்ளி போனதால், புதுச்சேரியில் மருத்துவ படிப்புகளுக்கு கவுன்சிலிங் தள்ளி போனது. எனவே, புதுச்சேரியில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, கேட்டுக்கொண்டுள்ளார்.சபாநாயகர் வலியுறுத்தல்
இதற்கிடையில், டில்லியில் ஜி-20 நாடுகளின் பார்லிமென்ட் சபாநாயகர்கள் மாநாட்டில் பங்கேற்ற சபாநாயகர் செல்வமும், புதுச்சேரியில் தள்ளிப்போய் உள்ள மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார். முதல்வரின் கடிதத்தின் மீது இவ்வாரத்தில் மத்திய அரசு முடிவெடுத்து, மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
