UPDATED : அக் 20, 2023 12:00 AM
ADDED : அக் 20, 2023 10:12 PM
ஐ.பி.எஸ்., அதிகாரிகளை மத்திய பணிக்கு அழைத்துக் கொள்வது தொடர்பான தற்போதுள்ள விதிமுறைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியான மாற்றம் செய்துள்ளது. இதன் வாயிலாக, சி.பி.ஐ.,யில் இனி இளம் ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.மாநில பணியில் உள்ள இளம் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை சி.பி.ஐ.,பணிக்கு எளிதாக அழைத்து கொள்ளும் வகையில், தற்போதுள்ள விதிமுறைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் புதிய மாற்றங்களை செய்துள்ளது.இதுகுறித்து புதுடில்லியில் உள்துறை அமைச்சக உயர் வட்டாரங்கள் கூறியதாவது:
நாடு முழுதும் நுாற்றுக்கணக்கான வழக்குகளை மத்திய குற்ற புலனாய்வு அமைப்பான, சி.பி.ஐ., கையாண்டு வருகிறது.வழக்குகள் தேக்கம்
ஊழல் தடுப்பில் துவங்கி, பல்வேறு குற்ற பின்னணிகளுடன் கூடிய வெவ்வேறு விதமான வழக்குகளாக பரந்து விரிந்து இந்த விசாரணைகள் நடக்கின்றன. ஆனால், அதற்கேற்ற வகையில் போதுமான எண்ணிக்கையிலான அதிகாரிகள் சி.பி.ஐ.,யில் இல்லை. இதனால் ஏராளமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. முக்கிய வழக்குகளில் கூட மந்த நிலை காணப்படுகிறது.வழக்குகளை தற்போது கையாளும் அதிகாரிகளுக்கும் கூடுதல் பணிச் சுமை இருந்து வருவதால், இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது.எஸ்.பி., அந்தஸ்தில் உள்ளவர்கள் தான் வழக்குகளில் விசாரணை அதிகாரிகளாக இருக்க முடியும். ஆனால், தற்போதுள்ள நிலவரத்தின்படி மொத்தம் 42 எஸ்.பி., பணியிடங்கள் காலியாக உள்ளன.சி.பி.ஐ.,யில் மட்டுமல்லாமல், மத்திய புலனாய்வு அமைப்புகள் பலவற்றிலுமே அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது. உளவு அமைப்பான ஐ.பி.,யில் மட்டும் 32 இடங்கள் காலியாக உள்ளன. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள பல வி.ஐ.பி.,க்கள் மீதான வழக்குகளை மிக ஜாக்கிரதையாக கையாள வேண்டும்.இத்தகைய வழக்குகளை எஸ்.பி., அந்தஸ்தில் உள்ள ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தான் நேரடியாக பார்வையிட்டு, அதன் போக்கை கண்காணித்து கையாள வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்கு தீர்வாக, தற்போது மாநில பணிகளில் உள்ள ஐ.பி.எஸ்., அதிகாரிகளை அவ்வளவு எளிதாக மத்திய பணிக்கு அழைத்துக் கொள்ளலாமா என்றால், அது முடியாது.தற்போதுள்ள விதியின்படி, மத்திய பணிகளான, ரா, ஐ.பி., - என்.ஐ.ஏ., போன்ற அமைப்புகளுக்கு வேண்டுமானால் ஐந்து ஆண்டுகள் மாநிலத்தில் பணிபுரிந்த அதிகாரிகளை அழைத்துக் கொள்ள முடியும்.பணிக்கு தகுதி
ஆனால் சி.பி.ஐ.,க்கு அவ்வாறு அழைக்க முடியாது. காரணம், ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக மாநிலப்பணி இருக்க வேண்டுமென்பதுடன் மட்டுமல்லாது, மேலும் சில வரையறைகளை நிறைவு செய்திருப்பவர்களை மட்டுமே, சி.பி.ஐ., பணிக்கு அழைக்க முடியும் என்ற நிலை இருந்தது.இந்த விதியில்தான் தற்போது உள்துறை அமைச்சகம் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி, இனிமேல் மாநில பணியில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தாலே, அந்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள், சி.பி.ஐ.,யிலும் பணிக்கு அமர்த்த தகுதிக்கு உரியவர்கள் ஆகின்றனர்.இந்த புதிய மாற்றத்தின் வாயிலாக, மத்திய பணியில் பணியாற்ற வேண்டுமென்ற துடிப்புடன் இருக்கும் இளம் ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கும் இருந்து வந்த தடை நீங்கியுள்ளது. மேலும், சி.பி.ஐ.,யில் எஸ்.பி., அந்தஸ்திலான அதிகாரிகளுக்கு நிலவும் பற்றாக்குறை தீர்ந்து, ஏராளமான இளம் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மத்திய பணிக்கு வரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
