யானைகளிடம் இருந்து பாதுகாப்பாக இருங்க! பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
யானைகளிடம் இருந்து பாதுகாப்பாக இருங்க! பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை
UPDATED : அக் 21, 2023 12:00 AM
ADDED : அக் 21, 2023 06:01 PM
வால்பாறை:
யானைகளிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து, மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில், வால்பாறை மலைப்பகுதி அமைந்துள்ளது. தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ள வால்பாறையில், யானைகள் இடம் பெயர்தல் அதிகளவில் உள்ளது.பருவமழைக்கு பின், வன வளம் பசுமையாக காணப்படுவதால், யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, ஜூன் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் யானைகள் நடமாட்டம் அதிகமுள்ளது. எஸ்டேட் பகுதியில், தனித்தனி கூட்டமாக முகாமிட்ட யானைகள், பகல் நேரத்தில் தேயிலை எஸ்டேட்டை ஒட்டியுள்ள துண்டு சோலையில் முகாமிடுகின்றன.இரவு நேரங்களில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் யானைகள், அங்கு பயிரிடப்பட்ட வாழை, பலா, கொய்யா போன்றவைகளை உட்கொள்கின்றன. இந்நிலையில், எஸ்டேட் பகுதியில் யானைகள் வந்தால் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவது குறித்து, இயற்கை பாதுகாப்பு அமைப்பின் சார்பில், விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, தலைமை ஆசிரியர் சிவன்ராஜ், வனவிலங்கு ஆராய்ச்சியாளர் கணேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர். விழிப்புணர்வு நாடகத்தில், யானைகள் நடமாட்டம் வழக்கத்திற்கு மாறாக, அதிக அளவில் உள்ளது. யானைகளுக்கு போதிய உணவு மற்றும் குடிநீர் வால்பாறையில் தடையில்லாமல் கிடைக்கிறது.யானைகளுக்கு பிடித்தமான வாழை, பலா போன்றவைகளை தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். தொழிலாளர் வீடுகளில் ரேஷன் அரிசி, காய்கறிகளை மூடி வைக்க வேண்டும். யானைகள் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அந்தந்த எஸ்டேட் நிர்வாகங்கள் அகற்ற வேண்டும். யானைகள் நடமாடும் பகுதியில், இரவு நேரத்தில் நடந்து மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும், என வலியுறுத்தினர்.
