90 கிட்ஸ் இனிப்பு வகைகள் சுவைத்து மகிழ்ந்த மாணவர்கள்
90 கிட்ஸ் இனிப்பு வகைகள் சுவைத்து மகிழ்ந்த மாணவர்கள்
UPDATED : அக் 21, 2023 12:00 AM
ADDED : அக் 21, 2023 06:04 PM
கோவை:
நமது சிறு வயதில் பள்ளிக்கு வெளியே இருக்கும் பெட்டி கடைகள், பாட்டி கூடையில் விற்கும் தேன் மிட்டாய், கம்மர்கட், முறுக்கு, சீடை உள்ளிட்ட நொறுக்கு தீனிகளையும், இனிப்பு வகைகளை மறக்க முடியாது. ஐந்து காசு, பத்து காசு என, அடம்பிடித்து வாங்கவே இத்தனையையும் சுவைக்கத்தான்.இப்படி, 1980, 1990 கிட்ஸ்களின் விருப்பமான இனிப்பு பட்டியல்களை அடுக்கிக்கொண்டே போகலாம். நாங்க எல்லாம் அப்போ சாப்பிட்ட இனிப்பு வகைகளே தனிதான் என்று நமது பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகள் கூறியிருப்பதை நம்மால் மறக்கமுடியாது.நாளடைவில் உணவு முறையில் ஏற்பட்ட மாற்றத்தால் பள்ளிகால நொறுக்கு தீனிகளையே மறந்துவிட்டோம். இப்படிப்பட்ட உணவு வகைகளை, 33 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அனைத்தையும் சுவைத்து மகிழ்ந்ததுடன், தற்போதைய தலைமுறைக்கும் வரிசைபடுத்தி காட்டியுள்ளனர்.அதாவது, கோவை கோட்டைமேட்டில் உள்ள மன்ப உல் உலுாம் மேல்நிலைப் பள்ளியில் கடந்த, 1980-1990 வரை படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. 33 ஆண்டுகளுக்கு பிறகு மொத்தம், 92 பேர் ஒரே இடத்தில் சந்தித்து, கட்டித்தழுவியது காண்போருக்கு நெகிழ்ச்சி தந்தது.வகுப்பறையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அசைபோட்டு மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். பலர் உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீர் விட்டனர். தொடர்ந்து, உணவு வேளையில் பொரி உருண்டை, சீடை, நெல்லிக்காய், கம்மர்கட், தேன் மிட்டாய், கடலை பருப்பி, ஜவ்வரிசி வத்தல், ஆரஞ்சு மிட்டாய், சக்கர மிட்டாய், தேன் மிட்டாய் என பல வகைகள் இடம்பெற்றன.இவற்றை பார்த்த முன்னாள் மாணவர்கள், குடும்பத்தினர் ஆச்சரியத்துடன் ருசித்து மகிழ்ந்ததுடன், பள்ளிப்பருவ வாழ்க்கையை நினைத்து நெகிழ்ந்தனர்.
