அரவக்குறிச்சி அருகே பள்ளியில் தீ விபத்து: விடைத்தாள் எரிந்து நாசம்
அரவக்குறிச்சி அருகே பள்ளியில் தீ விபத்து: விடைத்தாள் எரிந்து நாசம்
UPDATED : அக் 23, 2023 12:00 AM
ADDED : அக் 23, 2023 10:25 AM
அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சி அருகே, அரசு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், மாணவர்கள் எழுதியிருந்த விடைத்தாள்கள் எரிந்து நாசமாயின.கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே ஆண்டிப்பட்டிக்கோட்டை பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. நேற்று சனிக்கிழமை என்பதால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது. பூட்டியிருந்த பள்ளி வளாகத்திற்குள், திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பள்ளியில் நுழைந்து, தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர்.அதே சமயம், அரவக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்தில் மாணவர்கள் எழுதிய தேர்வு விடைத்தாள்கள் எரிந்து நாசமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பூட்டியிருந்த பள்ளிக்குள் தீ விபத்து ஏற்பட்டது, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், இது குறித்து அரவக்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் பள்ளி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தீ விபத்துக்கான காரணம் குறித்து, அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
