UPDATED : அக் 23, 2023 12:00 AM
ADDED : அக் 23, 2023 10:53 AM
பந்தலுார்:
உலக விஞ்ஞானிகள் பட்டியலில், பந்தலுார் தோட்ட தொழிலாளியின் மகன் இடம் பெற்றுள்ளார்.நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே அத்திகுன்னா தேயிலை தோட்ட பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து, 65. தோட்ட தொழிலாளியான, இவரின் மகன் அசோக்குமார்,44, பள்ளி படிப்பை அத்திக்குன்னா மற்றும் பந்தலுார் அரசு பள்ளிகளில் நிறைவு செய்தார்.தொடர்ந்து, கோவை, திருச்சியில் கல்லுாரி கல்வி பயின்றார். ஆராய்ச்சி படிப்பை திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியில் முடித்தார். உயிரி தொழில்நுட்பவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார். தற்போது, சென்னை சவீதா பல்கலைக்கழகத்தில் மருந்தியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஐரோப்பியாவில் உள்ள சில பல்கலைகழகங்களில் வருகை தரும் பேராசிரியராக உள்ளார்.ரிலையன்ஸ் இந்தியா நிறுவனத்தில் உயிரி எரிபொருட்கள் மற்றும் பயோ ஜெட் எரிபொருட்கள், உலோக இரும்பு உற்பத்தி ஆகியவை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது, 4 ஆராய்ச்சி பிரிவு மாணவர்கள், 15 மருத்துவ மாணவர்கள் படிக்க உதவி வருகிறார்.அசோக்குமார் கூறுகையில், அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்ட உலக விஞ்ஞானிகள் பெயர் பட்டியலில் எனது பெயர் வந்துள்ளது. என் பெற்றோர் மற்றும் நம் நாட்டுக்கு பெருமை. தளராத லட்சியத்துடன் கல்வி பயின்றால் சாதனைகள் நம்மை தொடரும், என்றார். இவருக்கு பந்தலுார் மற்றும் அத்திக்குன்னா பகுதி தோட்ட தொழிலாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
