தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளி; திருப்பூர் வளர்ச்சியின் அடிப்படை தத்துவம்!

நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளி; திருப்பூர் வளர்ச்சியின் அடிப்படை தத்துவம்!

நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளி; திருப்பூர் வளர்ச்சியின் அடிப்படை தத்துவம்!


UPDATED : அக் 25, 2023 12:00 AM

ADDED : அக் 25, 2023 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 25, 2023 12:00 AM ADDED : அக் 25, 2023 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மனித குலம் உள்ளவரை, ஆயத்த ஆடை உற்பத்தி துறையும் இருக்கும். ஆடை உற்பத்தித் துறை மீது அதிக கவனம் செலுத்தி வளர்ச்சி பெறச் செய்வதன்மூலம் வேலை வாய்ப்பை, பொருளாதாரத்தை உயர்த்தலாம். இந்தியாவின் பின்னலாடை நகரம், டாலர் சிட்டி என்றழைக்கப்படும் திருப்பூர், பின்னலாடை ஏற்றுமதியில் அடியெடுத்து வைத்த சில ஆண்டுகளிலேயே, நாங்கள் ஏற்றுமதி நிறுவனத்தை துவக்கி விட்டோம். அப்போதெல்லாம் தொழில் வழிகாட்டிகள் என்று யாருமில்லை; அனுபவப்பூர்வமாக உணர்ந்தே கற்றுக்கொண்டோம்.ஆரம்ப காலத்தில் அரசின் உதவியும் பெரிதாக இல்லை. தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பே இன்று உலகமே வியக்கும் அளவு, பின்னலாடை ஏற்றுமதி நகராக திருப்பூரை மாற்றியுள்ளது. இந்திய பின்னலாடை உற்பத்தியில், 60 சதவீத பங்களிப்பு கொண்டுள்ளபோதும், உள்கட்டமைப்பு வசதிகளில் திருப்பூர் இன்னும் தன்னிறைவு பெறவில்லை.சீனாவில், ஒவ்வொரு பகுதிக்கும் உகந்த உற்பத்தி துறையை கண்டறிந்து, அரசே முன்வந்து அந்தந்த துறை வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை உருவாக்கி கொடுக்கிறது. அரசு உருவாக்கிக் கொடுத்த வழித்தடத்தில் தொழில்முனைவோர் பயணித்தாலே போதுமானது. அதனாலேயே, உலக சந்தைக்கு அனைத்து வகை பொருட்களையும் அதிகளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக சீனா திகழ்கிறது. நம் நாட்டின் ஒரு மாநிலம் அளவே உள்ள வங்கதேசம், நம்மைவிட இரண்டரை சதவீதம் ஆடை ஏற்றுமதியில் முந்துகிறது.சீனா மற்றும் வங்கதேசம் போல், தொழில் வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், தமிழகம் இன்று மிகப்பெரிய ஜவுளி உற்பத்தி மாநிலமாக மாறியிருக்கும். கடந்த பத்து ஆண்டுகளாக ஆயத்த ஆடை உற்பத்தி துறையை மத்திய அரசு நன்கு புரிந்துகொண்டுள்ளது. மெகா டெக்ஸ்டைல் பார்க், பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கச்சலுகை திட்டம் என தொலை நோக்குப்பார்வையில் பல புதிய திட்டங்களை உருவாக்கி, ஆடை உற்பத்தி துறையினருக்கு கைகொடுத்து வருகிறது. ஆடை உற்பத்தி துறையில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களே ஏராளம் உள்ளன. கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட அவசர கால கடன், ஆடை உற்பத்தி துறை சார்ந்த பல குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.செயற்கை இழைஆடையில் கவனம்
உலக சந்தைக்கு, 70 சதவீதம் செயற்கை இழை ஆடை தேவைப்படுகிறது. 30 சதவீத அளவிலேயே பருத்தி ஆடைக்கான தேவை உள்ளது. திருப்பூர், ஆரம்ப காலம் முதலே பருத்தி ஆடை தயாரிப்பிலேயே ஈடுபட்டு வருகிறது. கடந்த, 2016ல் நான் ஏற்றுமதியாளர் சங்க தலைவராக பொறுப்பேற்றவுடன் செயற்கை இழை ஆடை உற்பத்தியில் திருப்பூரை கால்பதிக்கச் செய்வதற்கான முயற்சிகளை துவக்கி விட்டோம்.செயற்கை இழை உற்பத்தியில் பிர்லாவின் கிராஸிம், ரிலையன்ஸ் நிறுவனங்கள் நம் நாட்டில் முன்னிலை வகிக்கின்றன. இவ்விரு நிறுவனங்களின் செயற்கை இழைகளை காட்சிப்படுத்தும் ஸ்டுடியோ திருப்பூரில் நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு தொழில்நுட்ப மேம்பாட்டை மேற்கொள்வதன் வாயிலாக திருப்பூர் பின்னலாடை வர்த்தகத்தை, ஒரு லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கான லட்சிய பயணத்தை நோக்கி நாளும் நகர்ந்து வருகிறது.செயற்கை இழை ஆடைகளில் ஏராளமான மதிப்பு கூட்டுதல்கள் மேற்கொள்ள முடியும். இதனால் பருத்தி ஆடைகளைவிட, செயற்கை இழை ஆடைகளுக்கு அதிக விலை பெறமுடியும். நானோ தொழில்நுட்பத்தால் வியர்வை உறிஞ்சும் தன்மை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் பாலியெஸ்டர் ஆடைகளில் சேர்க்கப்படுகின்றன. பருத்தி ஆடைகள் போலவே பாலியெஸ்டர் ஆடையின் தன்மையும் மாறி வருகிறது.அடல் இன்குபேஷன் மையம் அமைக்கப்பட்டு, புதுமையான ஆடை உற்பத்தி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் திருப்பூரில் உருவாகிவருகின்றன. சுற்றுச்சூழல் மாசு குறைக்கும் மறு சுழற்சி ஆடை, செயற்கை இழை ஆடை உற்பத்தியில் பின்னலாடை துறையினர் அதிக கவனம் செலுத்த துவங்கி விட்டனர்.இளம் தலைமுறைக்கு அனுபவ பாடம்
அதீத மாற்றங்களுக்கு உட்பட்டது ஆயத்த ஆடை உற்பத்தி துறை. இந்த துறை சார்ந்த தொழில்முனைவோர் எப்போதும் மிகுந்த கவனத்துடன் விழிப்புடன் செயல்பட வேண்டியது அவசியம். திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையின் கடந்த, 50 ஆண்டுகால பயணம், இளம் தலை முறை தொழில்முனைவோருக்கு சிறந்த பாடமாக உள்ளது.ஆடை உற்பத்தி தொழில் நுட்பங்களை கற்றுக்கொடுக்க, ஏராளமான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. திருப்பூரில், மிகப்பெரிய ஆடை உற்பத்தி கல்விக்களமாக, நிப்ட்-டீ கல்லுாரி செயல்படுகிறது. தொழில் துவங்கவும், தொழில் விரிவாக்கங்களுக்கு ஏராளமான அரசு திட்டங்கள் உள்ளன.அன்று நாங்கள் சுயமாக நிறுவனங்களை உருவாக்கினோம். இளைய தலைமுறையினருக்கு, தங்கள் பெற்றோர் உருவாக்கிய களம் உள்ளது. தாங்கள் விரும்பும் புதிய தொழில் களத்தையும் உருவாக்கிக் கொள்வதும் சிரமமில்லை.நேற்றைய தொழிலாளி, இன்றைய முதலாளி என்கிற தத்துவத்தை அடிப்படையாக கொண்டே, திருப்பூர் பின்னலாடை துறை பயணித்து வருகிறது. குறு, சிறு, நடுத்தர முதலீட்டாளர்களுக்கு அரசு அதிக ஊக்கம் அளித்தால்தான் ஒரு தொழிலாளி, தொழில் முனைவோராக மாறமுடியும்.பிணையமின்றி, 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் வரை வங்கி கடன் வசதி உள்ளது. ஆனாலும், பிணையமின்றி கடன் வழங்கும் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன. மத்திய அரசு, கடன் வழங்குவதில் வங்கிகள் காட்டும் தயக்கத்தை போக்க வேண்டும்.அறிவியல்பூர்வ செயல்பாடு
உலக சந்தையில் நிலவிவரும் போட்டிகளை எதிர்கொள்வதற்கு, பிரிட்டன், கனடா போன்ற பல்வேறு நாடுகளுடன் வரியில்லாத வர்த்தக ஒப்பந்தங்கள் அவசியம். அதேநேரம், அறிவியல் பூர்வமாக புரிந்து செயல்பட வேண்டியது அவசியம்.வர்த்தக ஒப்பந்தங்களால் ஆர்டர் அதிகம் வர வாய்ப்புள்ளது. அவற்றை கையாளுவதற்கான கட்டமைப்புகள் நம்மிடம் இல்லை. மத்திய, மாநில அரசுகள் நகர உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஆடை உற்பத்தி தொழில்முனைவோர், தங்கள் நிறுவனங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்தவேண்டும்.கொரோனாவுக்குப்பின் இரண்டு ஆண்டுகளாக ஆடை வர்த்தகம் சர்வதேச அளவில் குறைந்துள்ளது. திருப்பூர் உட்பட இந்திய பின்னலாடை ஏற்றுமதிக்கு நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர் வழங்கும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆடை தேவை குறைந்துவிட்டது. உக்ரைன் - ரஷ்யா போர் நீடிப்பது, திருப்பூரின் வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கச் செய்துள்ளது.இந்த இக்கட்டான சூழலில், மத்திய, மாநில அரசுகள் தொழில் முனைவோருக்கு உதவிக்கரம் நீட்டுவது அவசியம். கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட அவசர கால கடன் திட்டத்தை நீட்டிக்கவேண்டும். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், நிலுவை கடன்களை திருப்பிச் செலுத்த ஆறு மாதங்கள் விலக்கு அளிக்கவேண்டும். தமிழக அரசு, மின் நிலை கட்டணத்தை அபரிமிதமாக உயர்த்திவிட்டது. முழுமையாக இயங்கி, மாதம், 35 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்திய ஒரு நிறுவனம், தற்போது இயங்காத நிலையிலேயே, 38 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த நேர்கிறது.மின் நிலை கட்டண உயர்வு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை விரைவில் நலிவடையச் செய்துவிடும். மின் நிலை கட்டண உயர்வை ரத்து செய்யவேண்டியது அவசியம். நம் நாட்டில் இளைஞர்கள் அதிகம் உள்ளனர். பருத்தி உற்பத்தி, செயற்கை இழை உற்பத்தியும் நம்மிடம் அதிகம் உள்ளது. இந்த வளங்களையெல்லாம் சரியாக பயன்படுத்தி, ஆடை உற்பத்தி துறையை வளர்ச்சி பெறச் செய்ய, தொழில்முனைவோருக்கு அரசு வழிகாட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க முன்னாள் தலைவர்ராஜா எம்.சண்முகம் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us