ஆசிரியர்களுக்கு வந்துள்ள பாதி பண்டிகை முன்பணம்: கல்வி அதிகாரிகள் புலம்பல்
ஆசிரியர்களுக்கு வந்துள்ள பாதி பண்டிகை முன்பணம்: கல்வி அதிகாரிகள் புலம்பல்
UPDATED : அக் 26, 2023 12:00 AM
ADDED : அக் 26, 2023 10:23 AM
மதுரை:
மதுரையில் தீபாவளி பண்டிகை முன்பணம் கேட்டு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு இந்தாண்டும் பாதிக்கு பாதி தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.அரசு, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணமாக அரசு தலா ரூ.10 ஆயிரம் வழங்குகிறது. இந்தாண்டு தீபாவளிக்காக ஒரு மாதத்திற்கு முன்பே 80 சதவீதம் ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன் இப்பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இப்பணத்தை வட்டியின்றி 10 மாதங்கள் தலா ரூ.ஆயிரம் வீதம் திருப்பி அரசுக்கு செலுத்துவர்.இந்தாண்டு பற்றாக்குறையாகவே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பள்ளிகளில் விண்ணப்பித்த ஆசிரியர்கள் 50 சதவீதம் பேருக்கே வழங்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இப்பணத்தை யாருக்கு வழங்க, யாரை தவிர்க்க என தலைமையாசிரியர்கள், அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
இரண்டு ஆண்டுகளாகவே பண்டிகை முன்பணத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. தீபாவளி பண்டிகை என்பதால் இப்பண்டிகையை கொண்டாடாத ஆசிரியர்களை தவிர்த்து பிறருக்கு வழங்கினால், இது பண்டிகை முன்பணம் தான். அனைவரும் பெற உரிமை உள்ளது&' என சர்ச்சை ஏற்படுகிறது. இதை தவிர்க்க எத்தனை பேருக்கு முன்பணம் ஒதுக்கப்படவில்லை என கணக்கிட்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் அரசுக்கு மேல்முறையீடு செய்து அனைவருக்கும் முன்பணம் கிடைக்கும் வகையில் நிதியை கேட்டு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
