UPDATED : அக் 26, 2023 12:00 AM
ADDED : அக் 26, 2023 10:35 AM
சென்னை:
சந்திரயான்- 3 விண்கலம், நிலவில் கால் பதித்தபின், அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த தேடல் மாணவ, மாணவியரிடம் மேலோங்கியதால், சென்னை, பிர்லா கோளரங்களத்தின் பார்வையாளர்கள் அதிகரித்துள்ளனர்.தமிழக அரசின் கீழ் செயல்படும், சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கம், 1988ல் துவக்கப்பட்டது. வானியல் நிகழ்வுகள் குறித்து பொதுமக்களுக்கு, குறிப்பாக மாணவ, மாணவியருக்கு சரியான புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.இங்கு, நட்சத்திரங்கள், நட்சத்திர கூட்டங்கள், அவற்றின் நகர்வுகளை காண முடியும். சூரிய குடும்பத்தின் தோற்றம், கோள்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். கோள வடிவிலான புவியியல் நிகழ்வுகளை காணும் திரை வடிவம், பூமி பந்து போல் அமைக்கப்பட்டு உள்ளது. உலகில் எந்த இடத்தில், தற்போதைய காலநிலை நிலவரங்களை காணலாம்.புயல், சுனாமி போன்ற இயற்கை பேரிடர் காலங்களில், அவற்றின் நகர்வை துல்லியமாக காண முடியும். கடல்நீர் நீரோட்டம், கடல்நீர் தட்பவெட்ப நிலை, எந்த இடத்தில் அதிக மீன்வளம் உள்ளது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். செழிப்பான பயிர் சாகுபடி, தரிசுநிலம், அடர்வனம், நீர்வளம் போன்றவற்றை, கோளத்திரையில் காணலாம்.கோள்களை காணும் திரையரங்கம், இந்தியாவில் முதல் முறையாக இங்கு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு காட்சியும், 35 நிமிடம் வீதம் தமிழ், ஆங்கில மொழிகளில் திரையிடப்படுகிறது. இந்த திரையரங்கம், 2019ல், 10 கோடி ரூபாயில், டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டது. இங்கு தினமும், 1,500 முதல் 2,300 பேர் வரை பார்வையிட்டனர். சந்திரயான் - -3 வெற்றிக்கு பின், மாணவ - மாணவியரின் வருகை அதிகரித்துள்ளது.குறிப்பாக, பள்ளிகளும் தங்கள் மாணவர்களை அழைத்து செல்வதில் ஆர்வம் காட்டுகின்றன. இதனால், தற்போது தினமும், 3,000 பேர் வரை பார்வையிடுகின்றனர். அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படுகின்றன.அனைத்து காட்சிகள், அரங்குகளை பார்க்க, பெரியவர்களுக்கு 80 ரூபாய், சிறியவர்களுக்கு 40 ரூபாய் கட்டணம்.இது குறித்து, அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குனர் லெனின்தமிழ் கோவன் கூறியதாவது:
இங்குள்ள நவீன கருவிகள், ஒவ்வொரு கோள்களுக்கும் சென்று வந்த உணர்வை ஏற்படுத்தும். அறிவியல் சார்ந்து தெரிந்து கொள்ளும் ஆர்வம், முன்பை விட அதிகரித்துள்ளது. குழந்தை பருவத்திலே அறிவியல் புரிதலை ஏற்படுத்துவது அவசியம். வானியல் சார்ந்து பணிபுரியும் ஆர்வம் அதிகரித்ததால், அது குறித்த தேடலும் விரிவடைந்துள்ளது. மாவட்டம், மாநில அளவில் அறிவியல் சார்ந்த போட்டிகளில் பங்கேற்கும் மாணவ - மாணவியரை ஊக்குவித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.கவரும் அரங்குகள் என்னென்ன?
போக்குவரத்து காட்சிக்கூடம், 3டி படக்காட்சி, புதுமைக்கண் பயிற்சி கூடம், அணுக்கரு ஆற்றல் காட்சிக்கூடம், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி காட்சிக்கூடம், கடல்வள காட்சிக்கூடம், விந்தை கண்ணாடிகள் காட்சிக்கூடம், இந்திய விண்வெளி ஆய்வு காட்சிக்கூடம், உயிரி தொழில்நுட்ப காட்சிக்கூடம், கோளத்தில் அறிவியல், டாக்டர். சாலமன் விக்டர் இதய காட்சிக்கூடம், ராமானுஜம் கணித காட்சிக்கூடம், அறிவியல் பூங்கா, பரிணாம வளர்ச்சிப்பூங்கா, டைனோசர் உலகம்.
