‘சொந்த நாட்டிலேயே பணி புரியுங்கள்’: மலேசிய அமைச்சர்
‘சொந்த நாட்டிலேயே பணி புரியுங்கள்’: மலேசிய அமைச்சர்
UPDATED : ஜன 25, 2010 12:00 AM
ADDED : ஜன 25, 2010 01:49 PM
மலேசியாவில் வழங்கப்படும் உயர்கல்வி குறித்து...
மலேசியாவில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களும் உயர்கல்வித் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படுகின்றன. இவற்றின் தரத்தை மேம்படுத்த மலேசியன் குவாலிபிகேஷனஸ் ஏஜென்சி உட்பட சில அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சர்வதேச மாணவர்களை கவரும் வகையில் மலேசியா எஜூகேசன் புரொமோசனல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சர்வேத தரத்தில் உயர்கல்வி அளிக்கப்படுகிறது.
சர்வதேச மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் எப்படி உள்ளன?
மலேசியாவில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு உள்ளது. கல்விக் கட்டணம் மற்றும் இதர செலவுகள் குறைவு. தற்போது 70 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள் மலேசியாவில் படிக்கின்றனர். இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மட்டும் இரண்டாயிரம். அரசின் உரிய அங்கீகாரத்துடன் படிப்புகள் வழங்கப்படுவதால், மாணவர்கள் பயப்படத் தேவையில்லை.
மலேசியாவில் சர்வதேச மாணவர்களுக்கான வேலைவாய்ப்புகள் எப்படி?
வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்கும் மாணவர்கள் திரும்ப தங்களது சொந்த நாடுகளுக்கு சென்று வேலை செய்வதே சிறந்தது. தங்களது அறிவையும், திறமையையும் சொந்த நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள்.
‘மலேசியாவிற்கு வந்த 40 ஆயிரம் இந்தியர்கள் எங்கே என்று தெரியவில்லை’ என சமீபத்தில் மலேசிய அரசு தெரிவித்துள்ளதே... இந்நிலையில், மலேசியா வரும் சர்வதேச மாணவர்களுக்கு உங்களது அறிவுரை?
வேலை பார்ப்பதற்காகவும், சுற்றுலாவாகவும் வருபவர்கள் விசா காலம் முடிந்தும் மலேசியாவிலேயே தங்கிவிடுகின்றனர். இதைத் தடுக்க மலேசியா அரசு விசா முறையில் சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது. கல்வி பெறுவதற்கான விசாவில் வரும் மாணவர்களால் எந்தபாதிப்பும் இல்லை. எனினும், மாணவர் விசாவில் மாற்றம் இருக்கலாம். மலேசியாவில் உயர்கல்வி பெற வரும் மாணவர்களுக்கு மலாய் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உயர்கல்வி ஆங்கில மொழியில் வழங்கப்படுவதால், ஆங்கில மொழி தெரிந்திருந்தால் போதும். இந்தியர்களைப் பொறுத்தவரை சிறந்த ஆங்கில திறன் கொண்டவர்களாக உள்ளனர்.
சர்வதேச மாணவர்களுக்கு மலேசிய அரசு கல்விச் சலுகைகள், உதவித் தொகை உள்ளிட்டவற்றை வழங்குகிறதா?
இல்லை.
இந்திய உயர்கல்வி முறை குறித்து உங்களது கருத்து என்ன?
கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம், உள்கட்டமைப்பு வசதி போன்றவற்றில் இந்திய அரசு இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவுடனான கல்வி உறவுமுறை எந்தளவில் உள்ளது. எதிர்கால திட்டங்கள் என்ன?
இந்தியாவுடன் மலேசிய அரசு நல்லுறவுடனேயே செயல்பட்டு வருகிறது. பயிற்சிகள், உள்கட்டமைப்பு வசதிகள், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை இருநாட்டு கல்வி நிறுவனங்களும் பகிர்ந்துகொள்ளும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை மேலும் வரவேற்கிறோம்.
இவ்வாறு மலேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பதில் அளித்தார்.
