முன்பை விட நாட்டின் வளர்ச்சி அதிக நம்பிக்கை அளிக்கிறது
முன்பை விட நாட்டின் வளர்ச்சி அதிக நம்பிக்கை அளிக்கிறது
UPDATED : அக் 26, 2023 12:00 AM
ADDED : அக் 26, 2023 10:38 AM
புதுடில்லி:
இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்த கண்ணோட்டம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட, தற்போது அதிக நம்பிக்கை அளிக்கும்படியாக உள்ளது என, ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு உறுப்பினர் ஜெயந்த் வர்மா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட, நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த கண்ணோட்டம், தற்போது அதிக நம்பிக்கை அளிக்கின்ற வகையில் முன்னேறியுள்ளது. அதிகரித்து வரும் நுகர்வோர் நம்பிக்கை மற்றும் பல குறியீடுகளின் வெளிப்பாடே, இந்த நம்பிக்கைக்கு காரணமாகும்.வீட்டு செலவினங்களை மட்டுமே நம்பி தேவை உள்ளதாலும், தேவையின் பிற கூறுகள் பல மாற்றங்களை எதிர்கொண்டு வருவதாலும், இந்த கண்ணோட்டமும் மாறக்கூடும். உலக பொருளாதரத்தில் நிலவும் மந்தநிலையின் காரணமாக, வெளிநாடுகளின் தேவை பெருமளவு குறைந்துள்ளது.தனியார் மூலதன செலவினங்களும் தற்போது வரை முடங்கியே உள்ளன. கொரோனா காலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அரசாங்க செலவின ஊக்கத்தை திரும்ப பெறுவதன் வாயிலாகவே, நிதி ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியும்.இந்தியாவில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, உணவு பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலையில் கடும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. இதனால், ஒரு சில மாதங்களில் பணவீக்கத்தில் கடும் உயர்வோ சரிவோ ஏற்பட்டால், அதுபற்றி எதுவும் கவலை கொள்ள தேவையில்லை.வளர்ச்சியில் சமரசம் செய்து கொள்ள தயாராக இல்லாததால், அடுத்த சில காலாண்டுகளுக்கு, 4 முதல் 5 சதவீத பணவீக்கத்தை ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். அதன்பின் பணவீக்கம் குறைந்து, ரிசர்வ் வங்கியின் வரம்புக்குள் வந்துவிடும்.மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பிரச்னை, உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. எனினும், இந்த சவால்களுக்கு இடையேயும், கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்திக்காமல், வரம்புக்கு உட்பட்டதாகவே உள்ளது. இதனால், பணவீக்கம் குறைவதில் தாமதம் ஏற்படலாமே தவிர, மீண்டும் அதிகரிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
