UPDATED : அக் 26, 2023 12:00 AM
ADDED : அக் 26, 2023 10:44 AM
சென்னை:
நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, இதய ரத்த நாள பாதிப்புகளுக்கு அப்பல்லோ மருத்துமனை சிகிச்சை அளித்து வருகிறது.இது குறித்து, மருத்துவமனையில் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் செங்கோட்டுவேலு கூறியதாவது:
வாழ்க்கை முறை, மன அழுத்தம், மரபணு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இதய பாதிப்பு ஏற்படுகிறது.இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்தநாளத்தில் பாதிப்பு அதிகளவில் இருக்கும்பட்சத்தில், ஸ்டென்ட் வைக்கும் மருத்துவ நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்தியாவில் இதய நோயாளிகள், மிகவும் சிக்கலான நிலையை எட்டிய பின் தான் மருத்துவமனைக்கு வருவதால், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை முறைகளை மேற்கொள்வதில், பல்வேறு சிக்கல்கள் உள்ளன.இவ்வாறான சவால்களை எதிர்கொள்ள, அப்பல்லோ மருத்துவமனை, லேசர், ரோட்டாப்ளேஷன், ஷாக் வேவ் லத்தோட்ரிப்சி, ஆர்பிட்டல் அத்ரெக்டமி மற்றும் கட்டிங் பலுான் ஆகிய மேம்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து சிகிச்சை அளிக்கும், நவீன மருத்துவ அணுகுமுறையை செயல்படுத்தி வருகிறது.நவீன மருத்துவ நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் வாயிலாக, இதய அடைப்புகளினால் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படுத்தி உள்ளோம். இந்த சிகிச்சை முறையால், மிகவும் கடினமான தசை அடைப்பால் பாதிக்கப்பட்ட 75 மூதாட்டி, இடது பக்க பிரச்னையால் பாதிக்கப்பட்ட 54 வயது டாக்டர்; ஏற்கனவே பை - பாஸ் அறுவை சிகிச்சை செய்த 77 வயது முதியவர் உள்ளிட்டோருக்கு பாதிப்புகளை சரி செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சுனீதா ரெட்டி கூறுகையில், எங்களது மருத்துவ சிகிச்சை உலக தரத்தில் உள்ளது. இதுபோன்ற பல்வேறு மருத்துவ செயல்முறைகளை பின்பற்றும் டாக்டர் செங்கோட்டுவேலு குழுவிற்கு, எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன், என்றார்.
