மாணவர்களுக்காகவே நீட் எதிர்ப்பு போராட்டம்: உதயநிதி
மாணவர்களுக்காகவே நீட் எதிர்ப்பு போராட்டம்: உதயநிதி
UPDATED : அக் 26, 2023 12:00 AM
ADDED : அக் 26, 2023 04:40 PM
விருதுநகர்:
நீட் தேர்வில் அரசியல் புகுத்தாதீர். இது மக்கள், மாணவர்களுக்கான போராட்டம் என அமைச்சர் உதயநிதி பேசினார்.விருதுநகரில் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் உதயநிதி பேசியதாவது:
இளைஞரணி உறுப்பினர்களுக்கு நீட் விலக்கு நம் இலக்கு என்ற பிரசுரம் வழங்கப்பட்டு, இணைய லிங் வழங்கப்பட்டுள்ளது. இது தனிப்பட்ட உதயநிதி பிரச்னை இல்லை, தி.மு.க., பிரச்னை இல்லை. இது தமிழகத்தின் பிரச்னை.நீட் தேர்வால் 6 ஆண்டுகளில் மட்டும் 22 குழந்தைகளை இழந்துள்ளோம். 1200க்கு 1176 மதிப்பெண் எடுத்தும் மருத்துவம் பயில முடியவில்லை. எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியையும் நீட் தேர்வு போராட்டத்திற்கு அழைத்தோம். நீட் தேர்வில் அரசியல் புகுத்தாதீர். இது மக்கள், மாணவர்களுக்கான போராட்டம்.நீட் தேர்வு ரத்தானால் மொத்த பலனையும் நீங்களே எடுத்து கொள்ளுங்கள் என்று அன்றைய உண்ணாவிரத கூட்டத்தில் கூறினேன். இன்றும் கூறுகிறேன். ஆனால் அவர் வரவில்லை. நாம் கையெழுத்து வாங்குவோம். இந்த கையெழுத்து இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.நம் பிரதமர் மோடி, எங்கு போனாலும், நம் தலைவர், என்னை பற்றி தான் பேசுகிறார். மத்திய பிரதேசத்தில் போய் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததால் வளர்ந்தது ஒரே குடும்பம் தான். அது கருணாநிதி குடும்பம் தான் என்கிறார். நான் சொல்கிறேன் இந்த ஒட்டுமொத்த தமிழகமுமே கருணாநிதியின் குடும்பம் தான்.இங்குள்ள எதிர்க்கட்சி தலைவர் நீட் தேர்வு கையெழுத்து இயக்கம் நாடகம், நான் கையெழுத்திட மாட்டேன் என்கிறார். யார் பெரிய நாடக நடிகர் என்பதை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் சசிகலாவை கேட்டால் தெரியும்.அவரது காலை பிடித்து முதல்வராகி அந்தம்மா காலை வாரிவிட்டவர் பழனிசாமி. 2021 சட்டசபை தேர்தலில் அடிமைகளை விரட்டியது போல் 2024 தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களையும் வீட்டு அனுப்ப வேண்டிய நேரம் வந்து விட்டது. இவ்வாறு உதயநிதி பேசினார்.
