UPDATED : அக் 27, 2023 12:00 AM
ADDED : அக் 27, 2023 10:23 AM
சென்னை:
வண்ணாரப்பேட்டை, மாநகர பேருந்தில் ஜன்னல் கம்பியை பிடித்தவாறு, காலணியை தரையில் தேய்த்தபடி, சாகச பயணம் செய்த மாணவர் கீழே விழுந்தார்.சென்னை, திருவொற்றியூர் பேருந்து நிலையத்தில் இருந்து, எழும்பூர் நோக்கி, தடம் எண் 28 என்ற மாநகர பேருந்து, நேற்று காலை சென்றது. அப்போது, சில பள்ளி மாணவர்கள், பின்பக்க படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர். அதில், ஒரு மாணவர் பள்ளி சீருடை, பையுடன், பேருந்தின் கடைசி இருக்கை ஜன்னல் கம்பியை பிடித்தவாறு, காலணியை தரையில் தேய்த்தபடி, சாகச பயணம் செய்துள்ளார்.பேருந்தை பின்தொடர்ந்து, காரில் வந்த ஒருவர், இதை தன் மொபைல் போனில் வீடியோ எடுத்து கொண்டே வந்துள்ளார். ஒரு கட்டத்தில், வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே, அந்த மாணவர் நிலைதடுமாறி சட்டென தவறி, சாலையில் விழுந்தார். இதில் அவருக்கு கை, கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. தற்போது இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
