எம்.பி.பி.எஸ்., காலி இடங்கள் நிரப்ப சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
எம்.பி.பி.எஸ்., காலி இடங்கள் நிரப்ப சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
UPDATED : அக் 27, 2023 12:00 AM
ADDED : அக் 28, 2023 07:08 AM
சென்னை:
தமிழகத்தில் காலியாக உள்ள, 86 எம்.பி.பி.எஸ்., இடங்களை நிரப்ப அனுமதி கோரி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நான்கு முறை நடந்தும், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 16; மதுரை எய்ம்ஸ் 3; நிகர்நிலை பல்கலை 50; சுயநிதி கல்லுாரி 17 என, 86 எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன.இந்த இடங்களை நிரப்புவதற்கான காலக்கெடு, செப்., 30ல் முடிந்தது. காலி இடங்களை நிரப்ப வசதியாக, மாநில அரசிடம் வழங்க வேண்டும்; சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, அமைச்சர் சுப்பிரமணியன் கடிதம் எழுதினார். இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.இதுகுறித்து, அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
மதிப்புமிக்க எம்.பி. பி.எஸ்., இடங்கள் தொடர்ந்து வீணாகி வருகின்றன. இதுகுறித்து, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை. எனவே, அவ்விடங்களை மாநில அரசுக்கு வழங்குவதோடு, சேர்க்கைக்கான அவகாசம் வழங்க, தேசிய மருத்துவ ஆணையத்திற்கு உத்தரவிடும்படி, உச்ச நீதிமன்றத்தில் விரைவில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
