மறுகுடியமர்வோரின் குழந்தைகளின் கல்விக்கு அரசு உத்தரவாதம்: ஐகோர்ட்
மறுகுடியமர்வோரின் குழந்தைகளின் கல்விக்கு அரசு உத்தரவாதம்: ஐகோர்ட்
UPDATED : அக் 29, 2023 12:00 AM
ADDED : அக் 29, 2023 10:52 AM
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில், நகர்ப்புற பாதிக்கப்பட்டோர் தகவல் மற்றும் ஆதார மையத்தின் நிர்வாக அறங்காவலர் வனேசா பீட்டர் தாக்கல் செய்த பொது நல மனுவில், சட்ட விதிகளை பின்பற்றாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது.மறு குடியமர்த்துதல் தொடர்பாக அரசின் கொள்கைகள் மற்றும் சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்தும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய, முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது, அடிப்படை வசதிகள், குழந்தைகள் கல்வி பெறுவதற்கான வசதிகள் செய்து கொடுக்காமல், கண்மூடித்தனமாக மறு குடியமர்த்தும் பணிகள் நடக்கின்றன என, மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.இதற்கு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
கூவம் ஆற்றின் கரையை ஆக்கிரமித்து குடிசை அமைத்து வசித்து வந்த 14,257 குடும்பங்களில், 13,514 குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, மாற்று இடங்களில் மறு குடியமர்த்தப்பட்டுள்ளனர்.மீதமுள்ள 743 குடும்பங்கள் மறு குடியமர்த்தப்படுவர். சட்டப்படி, அவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு உள்ளன. குடியேறிய பகுதியில் உள்ள பள்ளிகளில் சேர வசதியாக, கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை மாற்ற வசதியாக, சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.இருதரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
நடைமுறையில் உள்ள அரசின் இந்த திட்டம் பாராட்டுக்குரியது. இந்த திட்டம் சரியான முறையில் செயல்படுத்தப்படுகிறதா என்பதை, அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மறு குடியமர்த்துதல் சட்ட நடைமுறைகள்படி, அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. கல்வி உரிமை சட்டப்படி, கல்வி பெறுவது அடிப்படை உரிமை.அடிப்படை கல்வி வழங்க வேண்டியது அரசின் கடமை. மறு குடியமர்த்தப்பட்ட குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள், அரசு அல்லது தனியார் பள்ளிகளில் கல்வி பெற தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
