நிதியை தவறாக கையாண்ட புகார்: அண்ணா பல்கலையில் விசாரணை
நிதியை தவறாக கையாண்ட புகார்: அண்ணா பல்கலையில் விசாரணை
UPDATED : அக் 31, 2023 12:00 AM
ADDED : அக் 31, 2023 07:52 PM
சென்னை:
அண்ணா பல்கலையின் சான்றிதழ்களை மின்னணு மயமாக்கிய பணியில், நிதியை தவறாக கையாண்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், முன்னாள் பதிவாளர், துணை வேந்தர் ஆகியோரிடம், நேற்று விசாரணை நடத்தப்பட்டது.கடந்த 2015 முதல், அண்ணா பல்கலையில், சான்றிதழ்களை டிஜிட்டல் மயமாக்கியதில், நிதியை தவறாக கையாண்டதாக, பொது தணிக்கை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு சட்டசபையில் இந்த அறிக்கை தாக்கலானது.இதுகுறித்து, எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய சட்டசபை கணக்கு தணிக்கை குழு விசாரணை நடத்துகிறது. அண்ணா பல்கலையில், நேற்று தணிக்கை குழுவினர் விசாரணை நடத்தினர். உயர் கல்வி துறையில் செயலர்களாக இருந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ராஜேந்திர ரத்னு, சுனில் பாலிவால், அபூர்வா, மதுமதி, கார்த்திக் ஆகியோர் தனித்தனியாக ஆஜராகி விளக்கம் அளித்தனர்.பல்கலையின் பதிவாளர் கணேசன், முன்னாள் துணை வேந்தர் ராஜாராம் ஆகியோரும், குழுவின் முன் ஆஜராகி விளக்கம் தந்தனர். முன்னாள் துணைவேந்தர் சுரப்பா, தணிக்கை குழுவின் கேள்விகளுக்கு அறிக்கையாக பதில் அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில், சுரப்பாவை நேரில் அழைத்து விளக்கம் கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
