கூடுதல் வகுப்பறை கேட்டு அரசு பள்ளி மாணவர்கள் மறியல்
கூடுதல் வகுப்பறை கேட்டு அரசு பள்ளி மாணவர்கள் மறியல்
UPDATED : நவ 03, 2023 12:00 AM
ADDED : நவ 03, 2023 10:21 AM
கடம்பத்துார்:
கடம்பத்துார் ஒன்றியம், கூவம் ஊராட்சியில் அமைந்துள்ளது ஊராட்சி ஒன்றிய அரசு உயர்நிலைப்பள்ளி.இந்த பள்ளியில் கூவம், கூவம் காலனி, பிள்ளையார்குப்பம் உட்பட பல பகுதிகளைச் சேர்ந்த 154 மாணவ - மாணவியர் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் பழுதடைந்த வகுப்பறை கட்டடங்கள் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடித்து அகற்றப்பட்டன. இதனால் அருகில் உள்ள கிராம சேவை மைய கட்டடத்தில், நான்கு வகுப்பறையில் இட நெருக்கடியில் கல்வி பயின்று வருகின்றனர்.10 வகுப்பறைகள் இருக்க வேண்டிய அரசு பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் மட்டும் உள்ளதால் மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது. பள்ளி வளாகத்தில் பழுதடைந்த வகுப்பறை கட்டடம் இடிக்கப்பட்டு ஓராண்டாகியும் இன்று வரை புதிய வகுப்பறைகள் கட்ட கல்வித்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது மாணவர்களின் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் கடந்த ஆண்டு ஆகஸ்ட், டிசம்பர் ஆகிய இருமுறை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியும் இதுவரை கல்வித்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர் நேற்று பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ேஷாபனா தலைமையில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் கூவம் - சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த மப்பேடு காவல் உதவி ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சு நடத்தி சமாதானப்படுத்தியதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.எனவே, மாவட்ட கலெக்டர் அரசு பள்ளியில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூவம் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கூவம் ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளி குறுகிய இடத்தில் இயங்கி வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியிடமும் காலியாக உள்ளதால் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.எங்கள் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கடந்த 1990ம் ஆண்டு கூவம் மற்றும் குமாரசேரி ஊராட்சி எல்லையில் உள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை அரசு பள்ளி கட்டுவதற்கு அப்போதைய ஊராட்சி மன்ற தலைவர்கள் கல்வித்துறைக்கு தானமாக கொடுத்துள்ளனர். ஆனால் இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத்திறனை கேள்விக்குறியாக்கி உள்ளது என மேலாண்மைக்குழு தலைவர், பள்ளி கே.ஷோபனா கூறினார்.
