ஆபத்தை உணராத பருவம்... அடித்து சொல்வதில் என்ன பாவம்?
ஆபத்தை உணராத பருவம்... அடித்து சொல்வதில் என்ன பாவம்?
UPDATED : நவ 05, 2023 12:00 AM
ADDED : நவ 05, 2023 09:59 AM
சென்னை:
சென்னை போரூரில் இருந்து, குன்றத்துார் நோக்கி, அரசு பஸ் ஒன்று, நேற்று முன்தினம் மாலை சென்றது. இதில் பயணித்த பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிலர், படிக்கட்டில் நின்றும், ஜன்னலில் தொங்கிய படியும் ஆபத்தான பயணம் செய்தனர்.இதை பலரும் வேடிக்கை பார்த்தபடியே கடந்து சென்றனர். பஸ்சின் ஓட்டுனர், நடத்துனரும், அந்த மாணவர்களை எச்சரிக்கவும் இல்லை; கண்டிக்கவும் இல்லை. அதனால், அவர்கள் ஆபத்தை அறியாமல் படிக்கட்டில் நின்றபடி பயணித்தனர்.குன்றத்துார் அருகே, கெருகம்பாக்கம் நிறுத்தத்தில் பஸ் நின்றபோது, அந்த பஸ்சை பெண் ஒருவர் மறித்தார். துணிச்சலாக ஒட்டுனரிடம் சென்று, படிக்கட்டில் தொங்குவோரை கண்டுகொள்ளாமல், இப்படி பஸ்சை வேகமாக இயக்கலாமா? அவர்கள் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் என்னாவது? என சத்தம் போட்டார். இருக்கையில் அமர்ந்தபடியே இருந்த நடத்துனரை பார்த்து கடுமையாக திட்டினார்; அவர் பதிலுக்கு திட்ட, கோபத்தில் கத்தினார்.அதோடு நிற்காமல், படிக்கட்டிலும், ஜன்னலிலும் தொங்கிய மாணவர்களை பிடித்து இழுத்து, கீழே இறக்க முயன்றார்; அவர்கள் இறங்க மறுத்து, எதிர்த்துப் பேசியதும், அவர்களை அடித்து, சட்டையை பிடித்து இழுத்து கீழே இறக்கி விட்டார். இந்த சம்பவத்தின்போது, நடத்துனருக்கும் அவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எதையும் கண்டுக்காமல், பணியில் அலட்சியமாக இருந்த அந்த நடத்துனரை ஒருமையில் திட்டினார், அப்பெண்.இந்த வீடியோ பதிவு, சமூக வலைதளத்தில் நேற்று வேகமாக பரவி, பலரின் பாராட்டை பெற்றது. சமூக சேவையுடன், துணிச்சலாக இந்த பெண் நடந்து கொண்டதாக, பலர் பாராட்டு தெரிவித்தனர். அதே நேரத்தில், மாணவர்களை தாக்கியதையும், அரசு பஸ் ஓட்டுனர், நடத்துனரை தரக்குறைவாக பேசியதையும் சிலர் கண்டித்தனர்.இந்நிலையில், இதுகுறித்து மாங்காடு போலீசார் விசாரித்தபோது, இந்த துணிச்சலான நடவடிக்கையில் இறங்கியது, கெருகம்பாக்கத்தில் வசிக்கும் துணை நடிகை ரஞ்சனா நாச்சியார், 40, என்பது தெரியவந்தது. மேலும், இவர் பா.ஜ.,வில், கலை மற்றும் கலாசார பிரிவு செயலர் பொறுப்பிலும் உள்ளார் என்பதையும் அறிந்தனர்.இதையடுத்து, ரஞ்சனா நாச்சியார் மீது வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டு, அரசு பஸ் ஓட்டுனர் சரவணன் அளித்த புகாரில் அவரை, மாங்காடு போலீசார் கைது செய்தனர். அவர் மீது, ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, பூந்தமல்லியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர்.பின், ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில், நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டார். &'சமூக சேவை மனப்பான்மையுடன், தாய் உள்ளத்துடன் ரஞ்சனா நாச்சியார் நடந்து கொண்டார். எனவே ரஞ்சனா நாச்சியாரை ஜாமினில் விட வேண்டும்&' என, அவரது வழக்கறிஞர் வாதிட்டார்.வழக்கை விசாரித்த நீதிபதி ராம்குமார், &'40 நாட்களுக்கு மாங்காடு காவல் நிலையத்தில், ரஞ்சனா நாச்சியார் கையெழுத்திட வேண்டும்&' என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.என் நோக்கம் சரியானது!
ஜாமினில் வெளிவந்த பின், ரஞ்சனா நாச்சியார் கூறியதாவது:தட்டிக் கேட்டால், அது நியாயமான விஷயம் என்றால், நீதி கிடைக்கும் என்பதற்கு, இந்த வழக்கு சிறந்த உதாரணம்.அதற்காக அடித்துதான் கேட்க வேண்டும் என, நான் சொல்லவில்லை. தட்டிக் கேட்ட என் நோக்கம் சரியானது.பெற்றோர் கடமையை செய்தால், இதுபோல பொது மக்கள் இறங்கி கேட்க வேண்டியதில்லை.பெண்களுக்கு இலவச பஸ் இயக்குவதை போல, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு இலவச பஸ்கள் இயங்க வேண்டும்.ஜாமின் கிடைத்தது, எனக்கான வெற்றி இல்லை. இது ஒவ்வொரு தாய்க்கும் கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.இது குற்றமில்லை!
ரஞ்சனா நாச்சியார், பஸ் படிக்கட்டுகளிலும், பஸ் கூரையிலும் பயணம் செய்த மாணவர்களை, பதற்றத்தோடு கடிந்து கொண்டதோடு, விதிகளை மீறி, சட்டத்திற்கு புறம்பாக மாணவர்களை ஏற்றிச் சென்ற டிரைவர் மற்றும் கண்டக்டரை, உணர்ச்சி வசப்பட்டு, தகாத வார்த்தையில் திட்டியிருந்தாலும், அவை சமூக அக்கறையோடு செய்யப்பட்டவையாகத்தான் கருதப்பட வேண்டும்.அவரின் கடின வார்த்தைகள் தவறுதான். அந்த வார்த்தைகள் அந்த நேரத்திற்கான தவிர்க்க முடியாத தேவைதான் எனக் கருதுகிறேன். மாணவர்களை கை நீட்டி அடித்தது சட்டப்படி குற்றம். ஆனால், அது தார்மீக கோபத்தினால், மாணவர்களுக்கு ஏதுவும் நடந்து விடக் கூடாது என்ற அக்கறையால் நிகழ்ந்தது என்பதை, சிறு குழந்தை கூட சொல்லும்.கண்டக்டரை ஒருமையில் பேசியது, சட்ட விரோதமாக இருந்தாலும், அரசு ஊழியர்களின் அலட்சியத்தை தட்டிக் கேட்காத அதிகாரிகளின் பொறுப்பின்மையால் எழுந்த கோபம் என்றே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.அவர் விளம்பரத்திற்காக செய்திருந்தாலும், விழிப்புணர்வை ஏற்படுத்தியதால், அதை வரவேற்பதில் தவறில்லை. அரசின் அலட்சியத்தை, அதிகாரிகளின் மெத்தனத்தை வெளிக் கொண்டு வந்ததால், அது குற்றமில்லை எனக் கருதப்படலாம் என தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறினார்.
