தோட்டக்கலைக் கல்லூரியில் மா பயிர் பெருக்க திடல் அமைப்பு
தோட்டக்கலைக் கல்லூரியில் மா பயிர் பெருக்க திடல் அமைப்பு
UPDATED : நவ 05, 2023 12:00 AM
ADDED : நவ 05, 2023 10:22 AM
பெரியகுளம்:
தோட்டக்கலை கல்லூரியில் மா பயிர் பெருக்க திடலில் 8 வகை ரகங்கள் நடவு செய்து தரமான மா கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தெரிவித்தார்.பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மா பயிர் பெருக்கத்திடல் துவக்க விழா கல்லூரி முதல்வர் ராஜாங்கம் தலைமையில் நடந்தது. அவர் பேசுகையில் தமிழகத்தில் மா 1.52 லட்சம் எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு 9.43 லட்சம் டன்கள் விளைச்சல் செய்யப்படுகிறது. தேனி மாவட்டத்தில் 10ஆயிரம் எக்டேரில் சாகுபடியாகிறது. விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆராய்ச்சி நிலையத்தில் உயர் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, வறட்சியை தாங்கி விளையக்கூடிய வேர்குச்சி அறிமுக ஆராய்ச்சிகள் நடக்கிறது. விவசாயிகளுக்கு சிறந்த மா ரக கன்றுகள் உற்பத்தி செய்து, ஊக்குவிக்க இரண்டு ஏக்கரில் மா பயிர் பெருக்கத்திடல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இமாம்பசந்த், அல்போன்சா, மல்லிகா, காலப்பாடு, செந்தூரா, நீலம், பெங்களூரா மற்றும் ரூமானி ஆகிய எட்டு ரகங்கள் நடவு செய்யப்பட்டது.இதன் மூலம் வருங்காலத்தில் நெருக்கு ஒட்டு முறையில் உற்பத்தி செய்யப்படும். விவசாயத்துக்கு தரமான கன்றுகள் கொடுப்பதுடன், நாற்றுகள் அடர் நடவு முறையில் நடவு செய்யப்பட்டது என்றார். பேராசிரியர்கள் ராஜதுரை,நாகேஸ்வரி, முத்தையா, ராஜமாணிக்கம், சுகன்யா கன்னா, ஜானவி, சுந்தரையா, சங்கர் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
