டி.என்.பி.எஸ்.சி., மூலம் 67ஆயிரம் பணியிடம் நிரப்பப்படும்: அமைச்சர் தகவல்
டி.என்.பி.எஸ்.சி., மூலம் 67ஆயிரம் பணியிடம் நிரப்பப்படும்: அமைச்சர் தகவல்
UPDATED : நவ 05, 2023 12:00 AM
ADDED : நவ 05, 2023 10:23 AM
வேடசந்துார்:
டி.என்.பி.எஸ்.சி., மூலம் விரைவில் 67 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர் சக்கரபாணி பேசினார்.மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு வேடசந்துாரில் நடந்த தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கான ஆணையை வழங்கிய அவர் பேசியதாவது: எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசின் நலத்திட்ட உதவி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு சொல்லாத பல திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதே போன்ற வேலைவாய்ப்பு முகாமை நடத்தி பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ளார். இதே போன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் இனி தொடர்ச்சியாக நடைபெறும். விரைவில், டி.என்.பி.எஸ்.சி., மூலம் 67 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும், என்றார்.முகாமில் 120 தனியார் நிறுவங்கள் பங்கேற்றன.ஒன்றிய குழு தலைவர் சவுடீஸ்வரி, பேரூராட்சி தலைவர் மேகலா, தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்க மகளிர் திட்ட இயக்குனர் நா.சரவணன், ஆர்.டி.ஓ., சரவணன், வேலைவாய்ப்பு அலுவலர் காமேஸ்வரி, தி.மு.க., நகர செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவிசங்கர் பங்கேற்றனர்.
