மூலிகைத் தோட்டம்: பசுமையாக காட்சியளிக்கும் கல்லுாரி
மூலிகைத் தோட்டம்: பசுமையாக காட்சியளிக்கும் கல்லுாரி
UPDATED : நவ 06, 2023 12:00 AM
ADDED : நவ 06, 2023 10:04 AM
சிவகாசி:
நம் முன்னோர் இயற்கையோடு ஒன்றிணைத்து வாழ்ந்தனர். ஆனால் இன்றைய நவீன காலத்தில் நாம் இயற்கையோடு ஒன்றிணையாமல் செயற்கையோடு பின்னி பிணைந்து வாழ்கிறோம். செயற்கை அதிகம் மிகுந்த இவ்வுலகில் மனிதன் தனது மனநிம்மதியை திரும்பபெறுவதற்காக இயற்கையை தேடி ஓடிக் கொண்டிருக்கின்றான். இயற்கை அன்னையை நாம் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து மரம் நடுவதும், அவற்றைப் பாதுகாப்பதும் முக்கியமான கடமை. அப்போது தான் நகர் பசுமை அடையும். பசுமையைப் பேண மரங்களை நட வேண்டும். பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வருங்காலச் சமூகமாக இருக்கும் பட்சத்தில், வகுப்பறை மாற்றமே நமது சமுதாயத்தின் மாற்றம்.மாணவர்கள் மனதில் நமது இயற்கை அன்னையைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தி, மரம் நடுவதும் அவற்றைப் பாதுகாப்பதும் இன்றைய காலத்தில் எவ்வளவு முக்கியமான செயல் என்பதையும் உணரச் செய்ய வேண்டும். அந்த வகையில் சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லுாரியில் ஆயிரக்கணக்கான மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கல்லுாரி வளாகத்தில் மா, கொய்யா, வேம்பு என பல்வேறு வகையான மரக்கன்றுகளை மியாவாக்கி முறையில் நட்டு பாதுகாக்கின்றனர்.இதனால் கல்லுாரி வளாகமே பசுமையாக காட்சியளிக்கிறது. மேலும் மற்றொரு சிறப்பாக கல்லூரி வளாகத்தில் மூலிகை தோட்டம் பராமரிக்கப்பட்டு வருகின்றது இதில் துளசி, கீழாநெல்லி, குப்பைமேனி உள்ளிட்ட பல்வேறு வகையான மூலிகைச் செடிகள் உள்ளது.இந்த தோட்டத்தை கடந்து சென்றாலே எந்த நோயாகினும் சரியாகிவிடும். மேலும் நவக்கிரக தோட்டம் கல்லுாரியில் மற்றொரு சிறப்பு. சூரியன், சந்திரன் உள்ளிட்ட 9 நவகிரகங்களுக்கும் அதற்குரிய மரங்களான எருக்கு, முறுக்கு, கருங்காலி, நாயுருவி என 9 வகையான மரங்கள் வளர்க்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில் கல்லுாரி வளாகத்தில் மாணவிகளின் மனம், உடல் திறனை மேம்படுத்தும் வகையில் பூங்கா ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஊஞ்சல், இருக்கைகள், உடற்பயிற்சி மேற்கொள்ளும் உபகரணங்கள் என பலவும் உள்ளது.நவீன காலத்தில் பெருகிவரும் வாகனங்களால் சுற்றுச்சூழல் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. சுத்தமான காற்று என்பது கேள்விக்குறியாக உள்ளது. சுத்தமான காற்று வேண்டும் என்ற அதிக அளவில் மரக்கன்று நட வேண்டும். இதனால் நகரும் பசுமையாக மாறி, மழை பொழிய காரணமாக இருப்பதோடு வெப்பமயமாதலையும் தடுக்கிறது. இதற்காகவே கல்லுாரி வளாகம் முழுவதுமே மரங்கள் வளர்க்கப்படுகிறது. இதை பராமரிப்பதற்கு என்று பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இயற்கை காப்பாற்றும் அதே நேரத்தில் மாணவிகள் மன நிறைவோடு படிப்பதற்கான சூழலும் உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் கல்லுாரியில் ஒரு நாள் மட்டும் மாணவிகள் ஆசிரியர்கள் என அனைவரும் சைக்கிளை மட்டுமே பயன்படுத்துகின்றோம் என சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் கூறினார்.கல்லுாரியில துாய்மையான பசுமை தினத்தைக் கொண்டாடி வருகிறோம். எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் பசுமை மனதை ஒருமுகப்படுத்தி மாணவிகளுக்கு அயர்வின்றி கல்வி கற்கும் ஆர்வத்தைத் துாண்டுகிறது. பசுமை நிறைந்த கல்லுாரி வளாகம் மாணவிகளுக்கு எவ்விதத் துாண்டுதலும் இன்றி தானாகவே ஆழ்ந்து படிக்கும் எண்ணத்தை ஏற்படுத்தும் உந்துசக்தியாக அமைந்துள்ளது. கூடுதல் சிறப்பு தோட்டக்கலை, மழைநீர் சேகரிப்பு, கழிவுகளைப் பிரித்து மறுசுழற்சி செய்தல், மின்னணுக்கழிவு மேலாண்மை போன்றவை சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வண்ணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாணவி ஜெயசித்ரா கூறினார்.
