அனைத்து உயிர்களையும் சமமாக மதிப்பதே சனாதனம்: கவர்னர் ரவி
அனைத்து உயிர்களையும் சமமாக மதிப்பதே சனாதனம்: கவர்னர் ரவி
UPDATED : நவ 08, 2023 12:00 AM
ADDED : நவ 08, 2023 09:19 PM
காஞ்சிபுரம்:
அனைத்து உயிர்களையும் சமமாக மதிப்பதே சனாதனம் என காஞ்சிபுரம் சங்கரா கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் தமிழக கவர்னர் ரவி பேசினார்.காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துார் ஸ்ரீசங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின், 29வது பட்டமளிப்பு விழா, கல்லுாரியின் கூட்டரங்கில் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்றார்.கல்லுாரி வளாகத்தில் உள்ள ஆதிசங்கரர் சிலைக்கு, கவர்னர் ரவி பூஜை செய்து வணங்கினார். கல்லுாரி வளாகத்தில் நுண்ணுயிரியல் துறைக்காக அமைக்கப்பட்ட புதிய ஆய்வக கூடத்தையும், ரவி திறந்து வைத்தார்.கல்லுாரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். கல்வியியல் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் பஞ்சநாதன் வாழ்த்துரை வழங்கினார். இதையடுத்து, கலை, அறிவியல் உள்ளிட்ட 12 பாட பிரிவுகளில் பயின்ற 1,637 மாணவ - மாணவியருக்கு கவர்னர் பட்டம் வழங்கி பாராட்டு தெரிவித்தார். பல்கலை அளவில் முன்னிலை பெற்ற 22 மாணவ - மாணவியர், கவர்னரிடம் பட்டம், பதக்கம், சான்றிதழ் பெற்றனர்.நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது:
ஆதிசங்கரர் வழிவந்த இக்கல்வி நிறுவனம் இன்னும் அதிகம் சாதிக்கும். கடந்த 10 ஆண்டுகளில் வளர்ச்சி நோக்கி நம் பாரதம் வேகமாக முன்னேறி வருகிறது. பொருளாதாரத்தில் முதல் மூன்று இடத்தில் முன்னேறி இருக்கிறோம்.விண்ணையும், மண்ணையும் அளக்கும் அளவுக்கு நம் பாரதம், மற்ற நாடுகளுக்கு உதாரணமாக உள்ளது. நிலவின் தென்துருவத்தில் சென்ற முதல் நாடாக நாம் உள்ளோம். அதேபோல், கடலில் 6,000 அடி ஆழத்தில் ஆராய்ச்சி செய்கிறோம்.டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் வேகமாக முன்னேறியுள்ளோம். உலக அளவில், 45 சதவீத டிஜிட்டல் பண வர்த்தனை இந்தியாவில் நடக்கிறது. கொரோனா காலத்தில், 100 நாடுகளுக்கு இலவசமாக இந்தியா தடுப்பூசிகளை வழங்கியது. புதிய பாரதம் முன்னேறிக் கொண்டிருக்கிறது.சமுதாயத்தின் நீண்ட கால மரபு தான் சனாதனம். தன்னைப் போலவே, அனைத்து உயிர்களையும் சமமாக பாவிப்பதும், நேசிப்பதுமே சனாதனம். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது போல், அது ஒரு குடும்பம். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என வள்ளலார் கூறினார். அதுவே சனாதனம்.காஞ்சிபுரத்திலிருந்து, போதி தர்மர் என்ற பல்லவ அரசர், 5ம் நுாற்றாண்டில் புறப்பட்டு நாளந்தா பல்கலை சென்று, அங்கிருந்து சீனா சென்றார். அங்கு, தற்காப்பு கலைகளை பயிற்று வித்தார். இன்றைக்கும் நாளந்தா பல்கலை சிறந்து முன்னோடியாக விளங்குகிறது.மாணவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக என்ன செய்தோம் என, 2047ல் உங்களை நீங்களே கேட்க வேண்டும். திருவள்ளுவர் கூறியது போல, எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் என்று, மனதில் உறுதி பெற வேண்டும். மாணவர்கள் நாட்டின் சொத்து. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், கல்லுாரி செயலர் ரிஷிகேஷன், சங்கர மடம் சார்பில் சுந்தரேச ஐயர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நவீன் குமார், கல்லுாரி பேராசிரியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
