UPDATED : நவ 09, 2023 12:00 AM
ADDED : நவ 09, 2023 10:40 AM
கோவை:
திருப்பூரைச் சேர்ந்த, 18 வயது மாணவர், கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.கடந்த திங்கட்கிழமை இரவு அறையில் இருந்தபோது, பக்கத்து அறை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் உட்பட சீனியர் மாணவர்கள், ஏழு பேர் அங்கு வந்தனர். அவர்கள் அந்த மாணவரை ராகிங் செய்து, மது குடிக்க பணம் கேட்டு மிரட்டினர்.அவர் பணம் கொடுக்க மறுத்ததால், ஆத்திரம் அடைந்த அவர்கள், அந்த மாணவரை தங்களது அறைக்கு இழுத்துச் சென்று, மொட்டை அடித்து, நிர்வாணப்படுத்தி, மொபைல் போனிலும் வீடியோ எடுத்தனர்.சம்பவத்தை தன் பெற்றோருக்கு அவர் போனில் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த மாணவரின் பெற்றோர் கோவை வந்து மகனுடன் சென்று, பீளமேடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். புகாரின்படி, ராகிங் செய்த அந்த ஏழு மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர். கல்லுாரி நிர்வாகம், அவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
