தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர் ரத்த அழுத்த சிகிச்சை நிபுணர்: தேவை, பிரத்யேக மருத்துவ படிப்பு

உயர் ரத்த அழுத்த சிகிச்சை நிபுணர்: தேவை, பிரத்யேக மருத்துவ படிப்பு

உயர் ரத்த அழுத்த சிகிச்சை நிபுணர்: தேவை, பிரத்யேக மருத்துவ படிப்பு


UPDATED : நவ 09, 2023 12:00 AM

ADDED : நவ 09, 2023 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2023 12:00 AM ADDED : நவ 09, 2023 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கட்டுரையாளர், மாநில அரசின் சிறந்த மருத்துவர் விருது பெற்றவர். தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவர், இந்திய உயர் ரத்த அழுத்த சங்க தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தவர். மத்திய அரசின் இந்தியன் ஹைபர்டென்ஷன் கன்ட்ரோல் இனிஷியேட்டிவ் அமைப்பின் ஆலோசகர்; திருப்பூர் தமிழ்ச் சங்க தலைவர்.நம் நாட்டில், 30 கோடி பேர் ஹைபர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 12 சதவீதம் பேருக்கு மட்டுமே ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ரத்த அழுத்தம் இதய நோய், மாரடைப்பு, சிறுநீரக கோளாறு, மூளையில் ரத்த கசிவு, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மூல காரணி; இது, மெல்லக் கொல்லும் வியாதி (சைலன்ட் கில்லர்).பரம்பரை கோளாறு, நாளமில்லா சுரப்பியில் ஏற்படும் மாற்றம், தைராய்டு உள்ளிட்ட காரணங்களால், 10 சதவீதம் பேருக்கு ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. காரணம் கண்டறியப்படக்கூடிய ரத்த அழுத்தம் குணப்படுத்தக்கூடியது. ஆனால், 90 சதவீதம் பேருக்கு ரத்த அழுத்தத்துக்கான காரணத்தையே கண்டறிய முடியாது; எந்த அறிகுறியும் தென்படாது. துவக்கத்தில் எந்தவொரு சிகிச்சையும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். இதனால் தான், திடீர் மரணங்கள் அதிகளவில் நிகழ்கின்றன.கொடிதினும் கொடிது
கிருமி தொற்று, கேன்சர் போன்ற வியாதிகளால் ஏற்படும் இறப்பை காட்டிலும், உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் இறப்பு அதிகம். மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எப்போதும் மன அமைதியுடன் இருக்க வேண்டும்.தினமும், 6, 7 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டும். உணவில் உப்பு குறைவாக சேர்க்க வேண்டும். காய்கறி, பழங்கள் அதிகம் உட்கொள்ள வேண்டும். நெய் போன்ற கொழுப்பு பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்; உடற்பயிற்சி அவசியம். அதிக பாரம் துாக்குவது போன்ற கடின உடற்பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி பரிசோதித்து மருந்து உட்கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய பரிசோதனை செய்து கொள்வது அவசியம். ரத்த அழுத்தம் கண்களைக்கூட பாதிக்கும்.வீட்டிலேயே பரிசோதனை
வீட்டிலேயே சுயமாக ரத்த அழுத்தம் பரிசோதித்துக் கொள்வதற்கான கருவிகள் சந்தைக்கு வந்துவிட்டன. அவ்வப்போது சுயமாக பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் காரணமாக பக்கவாதம் வந்து விட்டால் குணப்படுத்துவது சிரமம். செயலிழந்த கை கால்களுடன், போராட்டம் நிறைந்த வாழ்க்கையை தான் வாழ வேண்டும்.பொது இடங்களில் ஆங்காங்கே எடை பரிசோதனை கருவிகள் வைக்கப்பட்டிருப்பது போன்று ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் மால் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில், ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் வைக்கப்படவேண்டும்; இத்தகைய பணியில் தன்னார்வ அமைப்பினர் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.நோய் அறிவது எளிது
வீட்டில் தாங்களே ரத்த அழுத்தத்தை பரிசோதித்துக்கொள்வோர் ஒரு வாரம் காலை, மாலை என இரு முறை பரிசோதனை செய்து, அதன் அளவை குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். வார முடிவில், மருத்துவரிடம் காண்பிக்கும் போது அந்த நபருக்கு ரத்த அழுத்தம் இருக்கிறதா, இல்லையா என்பதை மருத்துவர் உறுதி செய்வார். இந்த முறையால், ரத்த அழுத்த பாதிப்பை துல்லியமாக கண்டறிவது மருத்துவர்களுக்கு எளிதாக இருக்கும்.பலருக்கு, மருத்துவமனையில் டாக்டர்கள் ரத்த அழுத்தம் பரிசோதிக்கும் போது இயல்பை விட அதிகமாகவும், வீடுகளில் பரிசோதித்து பார்க்கும் போது சராசரி நிலையிலும் இருக்கும்; இது, ஒயிட்கோட் ஹைபர் டென்ஷன் எனப்படும். பலருக்கு வீடுகளில் ரத்த அழுத்தம் பரிசோதிக்கும் போது அதிகமாகவும், டாக்டரிடம் பரிசோதித்து பார்க்கும் போது, சராசரியாகவும் இருக்கும். இது, மாஸ்க்டு ஹைபர் டென்ஷன் எனப்படும். இதுபோன்ற சூழலில் அந்நபருக்கு கண் பிரச்னை, இ.சி.ஜி.,யில் பிரச்னை உள்ளதா என கண்டறிந்து, ரத்த அழுத்த பாதிப்பை கண்டறிய முடியும்.உறக்கத்தில் மரணம் ஏன்
இரவு உறங்கும் போது, ரத்த அழுத்தம் இயல்பு நிலையில் இருக்க வேண்டும். பலருக்கு காலை முதல், மாலை வரை ரத்த அழுத்தம் இயல்பாகவும், இரவு உறங்கும் போது அதிகமாகவும் இருக்கும். இதனை கண்டறிவது கஷ்டம். இதுபோன்ற பிரச்னை தான் திடீர் மாரடைப்பு, உறக்கத்தில் மரணம் ஏற்பட காரணமாகி விடுகிறது.மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, இந்திய மருத்துவ சங்கம், உலக சுகாதார அமைப்பு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் மற்றும் மாநில அரசு இணைந்து, தொற்றா நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், இந்தியன் ஹைபர் டென்ஷன் கன்ட்ரோல் இனிஷியேட்டிவ் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.மாநிலம் வாரியாக, அரசு சார்ந்த மருத்துவ நிலையங்கள் வாயிலாக, உயர் ரத்த அழுத்தம் உள்ளோரின் விவரம் சேகரித்து சிகிச்சை அளிப்பது, அவர்கள் மருந்து உட்கொள்வதை தொடர்ந்து கண்காணிப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். மாதிரி முயற்சியாக நாடு முழுவதும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில், ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட, 30 லட்சம் பேரை கண்டறிந்து தொடர் சிகிச்சை, கண்காணிப்பு மேற்கொண்டதன் காரணமாக 40 முதல், 50 சதவீதம் பேரின் ரத்த அழுத்தம் சராசரிக்கு வந்திருப்பதை உறுதிப்படுத்தினர். இந்த அசாத்திய சாதனையை பாராட்டி உலகளாவிய அளவில், பாராட்டு சான்றிதழும் இந்த அமைப்புக்கு கிடைத்துள்ளது.இந்த அமைப்பின் முயற்சியால் அரசுத்துறை சார்ந்த மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், நல்வாழ்வு மையங்களில், 365 நாட்களும் ரத்த அழுத்தத்திற்கான சீரான மருந்து தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த மாநில அரசின் மக்களை தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் துணை புரிகின்றன.நிபுணர்கள் அவசியம்
சர்க்கரை நோய்க்கு, ஸ்பெஷலிஸ்ட் எனப்படும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் இருப்பது போன்று, உயர் ரத்த அழுத்த நோய்க்கும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் வேண்டும். இதற்கென தனி மருத்துவப்படிப்பு உருவாக்க வேண்டும் என, மருத்துவ கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட, 30 கோடி பேருக்கு, நிபுணத்துவம் இல்லாமல் சிகிச்சை வழங்கி வருகிறோம் என்பதே யதார்த்தம். ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டால் உலகளவில் ஆண்டுக்கு ஒரு கோடி உயிரிழப்பை தடுக்க முடியும்; பல லட்சம் பேரின் உடல் உறுப்பு செயலிழப்பை தடுக்க முடியும்.மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தில் வீடுகளிலேயே ரத்த அழுத்தம் பரிசோதிக்கும் கருவியை மக்கள் பயன்படுத்தும் வகையிலான விழிப்புணர்வை அதிகளவில் வழங்க வேண்டும். அந்த கருவியை கோடிக்கணக்கில் தயாரித்து, மக்களுக்கு குறைந்த விலையில் வழங்க வேண்டும். ஒரு வீட்டில் ஒரு கருவி இருந்தால், அந்த ஒட்டு மொத்த குடும்பமே பயன் பெறும். கனடா, அயர்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் இக்கருவியை மக்கள் பயன்படுத்துவதால் அங்கு உயர் ரத்த அழுத்தம், 60 முதல், 70 சதவீதம் கட்டுக்குள் இருக்கிறது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us