காலி பணியிடங்கள் நிரப்ப எழுத்துத்தேர்வு; சிலபஸ் தயாரிக்க கமிட்டி
காலி பணியிடங்கள் நிரப்ப எழுத்துத்தேர்வு; சிலபஸ் தயாரிக்க கமிட்டி
UPDATED : நவ 10, 2023 12:00 AM
ADDED : நவ 10, 2023 12:17 PM
கோவை:
தமிழகத்தில் மாநகராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை, எழுத்துத்தேர்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான சிலபஸ் தயாரிக்க கமிட்டி அமைத்து, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு உத்தரவிட்டிருக்கிறார்.தமிழகத்தில், சென்னை மாநகராட்சி தவிர்த்து, மீதமுள்ள, 20 மாநகராட்சிகள், 138 நகராட்சிகளில், பொதுப்பிரிவு, சுகாதாரப் பிரிவு, பொறியியல் பிரிவு மற்றும் நகரமைப்பு பிரிவுகளில், 2,534 காலி பணியிடங்கள் உள்ளன. அண்ணா பல்கலை மூலம் எழுத்து தேர்வு நடத்தி, நேர்முக தேர்வு வாயிலாக, இப்பணியிடங்கள் நிரப்ப, நகராட்சி நிர்வாக இயக்குனரகம் முடிவு செய்திருக்கிறது.இதற்கான பாடத்திட்டம் இறுதி செய்து, எழுத்துத்தேர்வு நடத்த, நகராட்சிகளின் நிர்வராக இயக்குனர் தலைமையில் அலுவலர்கள் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. துணை தலைவராக, நகராட்சி நிர்வாக இணை ஆணையர் சிம்ரன்ஜித் சிங் காலோன், உறுப்பினர் செயலராக நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் விஜயகுமார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.உறுப்பினர்களாக திருச்சி மாநகராட்சி கமிஷனர் வைத்திநாதன், வேலுார் மாநகராட்சி கமிஷனர் ஜானகி, நகராட்சி நிர்வாக இயக்குனரக தலைமை பொறியாளர் நடராஜன், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர்கள் முஜூபுர் ரகுமான், இளங்கோவன். இணை இயக்குனர்கள் சாரதா, லட்சுமி, பாரிஜாதம், உமா மகேஸ்வரி, அச்சையா, துணை இயக்குனர்கள் விமலா, சித்ரசேனா, மண்டல செயற்பொறியாளர் பார்த்திபன், மாநகராட்சி பொறியாளர் பாண்டுரங்கன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள்-2023ல், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் அனுமதித்துள்ள பணியிடங்களுக்கு கல்வித்தகுதிகள் வரையறை செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி, பொதுப்பிரிவு, சுகாதாரப்பிரிவு, பொறியியல் மற்றும் நகரமைப்பு பிரிவில் உள்ள பணியிடங்களுக்கான பாடத்திட்டத்தை, தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மற்றும் பிற தேர்வு வாரியங்களில், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் உள்ள பணியிடத்துக்கு ஏற்ற பதவிகளுக்கான பாடத்திட்டத்தை ஒப்பீடு செய்து, பாடத்திட்டம் வகுக்க வேண்டும்.துறை வாரியாக பாடத்திட்டம் தயார் செய்து, இட ஒதுக்கீடு சுழற்சி முறை சரிபார்ப்பு செய்தல், எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுக்கான மதிப்பெண் விகிதாசாரத்தை முடிவு செய்தல் உள்ளிட்ட பணிகளை குழு உறுப்பினர்களுக்குள் ஆலோசித்து, 30 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க, புதிதாக நியமித்துள்ள குழுவினருக்கு, நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
