பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு ஏன்: அமைச்சர் பொன்முடி விளக்கம்
பட்டமளிப்பு விழா புறக்கணிப்பு ஏன்: அமைச்சர் பொன்முடி விளக்கம்
UPDATED : நவ 10, 2023 12:00 AM
ADDED : நவ 10, 2023 12:15 PM
விழுப்புரம்:
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் பெயர் போடுவதில்லை. யாரையும் பேசவும் கவர்னர் விடுவதில்லை. அதனால்தான் விழாக்களை புறக்கணிக்கிறேன் என அமைச்சர் பொன்முடி கூறினார்.விழுப்புரத்தில் நேற்று நடந்த தி.மு.க., நிகழ்ச்சியில், பங்கேற்ற அமைச்சர் பொன்முடி கூறியதாவது:
பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், பெரியார் சிலை அகற்றப்படும் என அண்ணாமலை கூறியதற்கு, அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபுவும் விளக்கம் அளித்துள்ளனர். அண்ணாமலை ஐ.பி.எஸ்., ஆனதற்கு காரணமே பெரியார்தான். தமிழகத்தில் இன்று அனைத்து தரப்பினரும் படிப்பதற்கும், சமம் என்பதற்கும், பெரியார் விதை போட்டதே காரணம்.சமூக பற்றுள்ளவர்களும், வட இந்தியர்களும் பெரியாரை ஏற்றுள்ளனர். உலகளவில் பகுத்தறிவு சிந்தனைக்கு காரணமானவர் பெரியார். அவரை பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி இல்லை. பதவி கிடைக்கும் என அண்ணாமலை இப்படி பேசுகிறார்.மக்கள் சேவையாற்றியவர்களுக்கு தான் சிலைகள் உள்ளன என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலை தன்னை திருத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் கடந்த கால பட்டமளிப்பு விழாக்களில், உயர்கல்வித் துறை செயலர், அமைச்சர் பெயர்கள் இருக்கும். விழாவில் அவர்கள் பேசுவார்கள்.ஆனால், இப்போது, யார் பெயரையும் போடுவதில்லை, யாரையும் பேச கவர்னர் விடுவதில்லை. அவர் மட்டுமே பேச வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார். 5 நிமிடம் எங்களை பேச அனுமதிக்க வேண்டும். அதற்கு அனுமதிக்காததால் தான் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க வேண்டி உள்ளது. இதன் பிறகாவது, பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்கள், புரோ சான்சிலர், செயலரையும் அழைக்க வேண்டும். பேசவும் அனுமதிக்க வேண்டும். இப்பிரச்னை குறித்து பேசிய புதுச்சேரி கவர்னர் கூட, தமிழக பல்கலைக்கழக விழாவில் கவர்னர், துணை வேந்தர் என, யாருமே பேசுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த பட்டமளிப்பு விழாவிலும் யாருமே பேசவில்லை. இனி, துணை வேந்தர்களிடம், நீங்களே விழாக்களை நடத்துங்கள், யாரையும் அழைக்காதீர்கள் என, நாங்கள் சொல்லும் அளவிற்கு, கவர்னர் நடந்துகொள்ள மாட்டார் என, நம்புகிறோம். இவ்வாறு பொன்முடி கூறினார்.
