UPDATED : நவ 11, 2023 12:00 AM
ADDED : நவ 11, 2023 10:41 AM
நாமக்கல்:
தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும், ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என, நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில், 2020 மார்ச், 10க்கு முன் உயர்கல்வி முடித்து ஊக்க ஊதியம் பெறாத ஆசிரியர்களுக்கு, உடனடியாக ஊக்க ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க, ஆதிதிராவிட நலத்துறை, கடந்த, 31ல் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், பழைய முறைப்படி ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த, பழைய முறையிலான உயர் கல்விக்கான ஊக்க ஊதியத்தை, 2020 மார்ச், 10க்கு முன் முடித்தவர்களுக்கும், அதற்கு பின் முடித்த ஆசிரியர்கள் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் ஆசிரியர்கள் பழைய நடைமுறையிலான, உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை பெற்று வந்தார்கள். கடந்த அ.தி.மு.க., அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த, தற்போதைய முதல்வர் ஸ்டாலின், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய முறையிலான உயர் கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்குவோம் என அறிவித்திருந்தார்.மேலும், தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும் இது கூறப்பட்டிருந்தது. உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பெற கோர்ட்டை நாட பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் தயாராகி வருகின்றனர்.இந்நிலையில், 2020 மார்ச், 10க்கு முன் உயர்கல்வி பயின்று ஊக்க ஊதியம் பெறாத ஆசிரியர்களுக்கு, உடனடியாக பழைய முறைப்படி, ஊக்க ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதனால், பள்ளி கல்வித்துறையை சேர்ந்த ஆசிரியர்கள், தங்களுக்கும் இதுபோன்ற அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை உடனடியாக வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறை போல், பள்ளிக்கல்வித்துறையும், பழைய முறையிலான உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை அனைத்து ஆசிரியர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
