முன்னாள் துணைவேந்தருக்கு எதிரான வழக்கில் புது உத்தரவு
முன்னாள் துணைவேந்தருக்கு எதிரான வழக்கில் புது உத்தரவு
UPDATED : நவ 11, 2023 12:00 AM
ADDED : நவ 11, 2023 04:01 PM
மதுரை: மதுரை நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் தாக்கல் செய்த மனு:
மதுரை காமராஜ் பல்கலையில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய போது, பல்கலையில் நடந்த முறைகேடுகளுக்கு எதிராக போராடினேன். கடந்த 2014 மே 16ல் வீட்டிற்கு அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது சிலர், துணைவேந்தர் கல்யாணி மதிவாணனுக்கு எதிராக பேட்டி கொடுக்கிறாயா; கொல்லாமல் விட மாட்டோம் என கூறி தாக்குதல் நடத்தினர்.அப்போதைய துணைவேந்தர் கல்யாணி மதிவாணன், முன்னாள் பதிவாளர் முத்துமாணிக்கம் உள்ளிட்ட ஐவர் மீது நாகமலை புதுக்கோட்டை போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.அதுபோல, கல்யாணி மதிவாணன் உள்ளிட்ட ஐவரும், தங்கள் மீது நாகமலை புதுக்கோட்டை போலீசார் பதிந்த வழக்கை ரத்து செய்ய மனு செய்தனர்.இருதரப்பு மனுக்களையும் விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி நேற்று பிறப்பித்த உத்தரவு:
போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் கல்யாணி மதிவாணன் உள்ளிட்ட ஐவரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதனால் வழக்கை ரத்து செய்யக் கோரும் அவர்களின் மனு மீது எவ்வித உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை; அம்மனு காலாவதியாகிவிட்டது. ஸ்ரீனிவாசனுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், ஜெ.எம்., 6 நீதிமன்றத்தை நாடலாம். அந்நீதிமன்றம் விசாரணையை எட்டு மாதங்களில் முடிக்க வேண்டும். தேவையெனில் மறு விசாரணைக்கு உத்தரவிடலாம். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.
