காமராஜர் கல்வி உதவி திட்டத்தை அமல்படுத்த அமைச்சரிடம் முறையீடு
காமராஜர் கல்வி உதவி திட்டத்தை அமல்படுத்த அமைச்சரிடம் முறையீடு
UPDATED : நவ 20, 2023 12:00 AM
ADDED : நவ 20, 2023 10:55 AM
புதுச்சேரி:
காமராஜர் கல்வி உதவி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என, அரசு மகளிர் கல்லுாரி மாணவிகள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து முறையிட்டனர்.சென்டாக் மூலம் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,காரைக்கால் காமராஜர் அரசு பொறியியல் கல்லுாரியில் பி.டெக்., சேரும் மாணவர்களுக்கு காமராஜர் கல்வி நிதியுதவி திட்டம் அமல்படுத்தப்படுகிறது.ஆனால், மகளிர் அரசு பொறியியல் கல்லுாரி மாணவிகளுக்கு காமராஜர் திட்டம் இன்னும் அமலுக்கு வராததால் விரக்தியில் உள்ளனர். இது தொடர்பாக முதல்வரிடம் முறையிட்ட கல்லுாரி மாணவிகள் நேற்று அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து முறையிட்டனர்.மகளிர் அரசு பொறியியல் கல்லுாரி மாணவிகள் கூறுகையில், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காரைக்கால் காமராஜர் அரசு பொறியியல் கல்லுாரியில் காமராஜர் கல்வி நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்படுவதால் அவர்கள் ரூ. 13,850 மற்றும் 9,000 ரூபாய் மட்டுமே செலுத்துகின்றனர். மீதி தொகை கழித்து கொள்ளப்படுகின்றது.ஆனால், மகளிர் பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டில் 43,500 ரூபாயும், இரண்டாமாண்டில் 40,000 ரூபாய் கட்டணம் செலுத்துகின்றனர். மகளிர் அரசு பொறியியல் கல்லுாரி மாணவிகளுக்கு காமராஜர் திட்டம் இன்னும் அமலுக்கு வரவில்லை. இதனால், பணம் செலுத்துவதில் நெருக்கடியை சந்தித்து வருகிறோம். குறிப்பாக ஏழை எளிய மாணவிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே காமராஜர் கல்வியுதவி திட்டத்தை அரசு மகளிர் கல்லுாரியில் அமல்படுத்த முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
