மத்திய அரசின் சலுகைகள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும்
மத்திய அரசின் சலுகைகள் முழுமையாக மக்களை சென்றடைய வேண்டும்
UPDATED : நவ 21, 2023 12:00 AM
ADDED : நவ 21, 2023 10:29 AM
ராமேஸ்வரம்:
மத்திய அரசின் கடன் உதவி, மானிய சலுகைகள், மக்களிடம் முழுமையாக சேர வேண்டும் என்பதே, பிரதமர் மோடியின் விருப்பம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.ராமேஸ்வரத்தில் நடந்த, சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி வாயிலாக கடன் வழங்கும் விழாவில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
மத்திய அரசின் கடனுதவி மற்றும் மானிய சலுகைகள், மக்களுக்கு முழுவதுமாக சேர வேண்டும் என பிரதமர் மோடி விரும்பினார். அதன்படி, முத்ரா திட்டத்தில், இடைத்தரகர்கள் இன்றி வங்கி வாயிலாக மக்களுக்கு நேரடியாக முழு பணமும் சென்றடைகிறது.இத்திட்டத்தில் பயனடைந்தவர்களில், 60 சதவீதம் பேர் பெண்களே. ஜாதி, மதம், கட்சி பாகுபாடின்றி சாலையோர காய்கறி, பூ, பழம் மற்றும் தெருக்கடை வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது.இதில் முக்கிய அம்சம், எவ்வித பிணையும் இன்றி கடன்கள் நேரடியாக வழங்கப்படுகின்றன. உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள், வியாபாரிகள் குறித்து ஆய்வு செய்து வங்கிக்கு கடிதம் அனுப்பினால் போதும், 10,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.டிஜிட்டல் பண பரிவர்த்தனையால், சில்லரை பிரச்னையின்றி வியாபாரிகளின் வங்கி கணக்கிற்கு பணம் நேரடியாக செல்கிறது. இதுவரை ராமேஸ்வரம் தீவு பகுதியில், 2,200 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே, உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள், வியாபாரிகளை தேர்வு செய்து உதவிட முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், நிதித்துறை இணை செயலர் பர்சந்த்குமார் கோயல், வங்கிகள் நிதிச்சேவை செயலர் விவேக் ஜோஸி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாக இயக்குநர் அஜய்குமார் ஸ்ரீவஸ்தவா, கூடுதல் இயக்குனர் சஞ்சய் விநாயக் முதலியார் மற்றும் பா.ஜ., மாநில பொதுச் செயலர் கருப்புமுருகானந்தம், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் பங்கேற்றனர்.முன்னதாக நேற்று காலை, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், நிர்மலா சீதாராமன் சுவாமி தரிசனம் செய்தார்.
