UPDATED : நவ 25, 2023 12:00 AM
ADDED : நவ 25, 2023 11:03 AM
மதுரை:
கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நுாலகம் அமைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்தது.கரூர் பி.வெள்ளாளப்பட்டி கவியரசு தாக்கல் செய்த பொதுநல மனு:
கரூர் மாநகராட்சியின் மையப் பகுதியில் பழமையான திருவள்ளுவர் விளையாட்டு மைதானம் உள்ளது. அருகிலுள்ள பசுபதீஸ்வரர் பெண்கள் பள்ளி, மாநகராட்சி ஆண்கள் பள்ளிக்கு தனி விளையாட்டு மைதானம் இல்லை. மாணவர்கள் திருவள்ளுவர் மைதானத்தை பயன்படுத்துகின்றனர்.அங்குள்ள பழமையான ராஜலிங்கம் மன்றத்தை அகற்றிவிட்டு நுாலகம் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்கு முறையான அனுமதியை மாநகராட்சி நிர்வாகம் பெறவில்லை. மைதான சுற்றுச்சுவர் அருகே மாவட்ட மைய நுாலகம் உள்ளது. அதனருகில் அல்லது மாற்று இடத்தில் நுாலகம் அமைத்தால் மக்கள் பயனடைவர். மைதானத்தில் நுாலகம் அமைத்தால் அங்கு படிக்க வருவோருக்கு விளையாட்டு போட்டி, நிகழ்ச்சிகளால் இடையூறு ஏற்படும். மைதானத்தில் நுாலகம் அமைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கவியரசு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமிநாராயணன் அமர்வு:
நுாலகம் கட்டுமானத்திற்கு ஒருவாரம் இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. விசாரணை நவ.27க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
