இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறவில்லை: கவர்னர் ரவி
இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறவில்லை: கவர்னர் ரவி
UPDATED : நவ 27, 2023 12:00 AM
ADDED : நவ 27, 2023 09:47 AM
சென்னை:
சென்னை, பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலையில், இந்திய அரசியலமைப்பு தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழக கவர்னர் ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.விழாவில், அவர் பேசியதாவது:
நம் அரசியலமைப்பு சட்டம், தீண்டாமையை நீக்குவதாக, அனைவருக்குமான சமத்துவம் கொண்டதாக இருக்க வேண்டும். தற்போது, சாதாரண மக்களுக்கான நீதி, விலை உயர்ந்ததாக உள்ளது. சுதந்திரத்திற்காக போராடும்போது ஒற்றுமையாக இருந்த நாம், அதன் பின் நிலம், மொழி என பிரிந்துள்ளோம்.மாநிலங்கள் என்ற பெயரில் பிரித்து, நம்மிடையே பிரிவினையை ஏற்படுத்தும் பல்வேறு கருத்துகள் இங்கே பரவி உள்ளன. பாரதம், தனித்துவம் வாய்ந்த நாடு என்பதை உணரவேண்டிய நேரம் இது. சுதந்திரம் பெற்ற பின், குறிப்பிட்டவர்கள் மட்டுமே, வளர்ச்சியை நோக்கி முதல் வரிசையில் நிற்கின்றனர். தனித்துவம் வாய்ந்த பல்வேறு குழுக்களின் மூலம், மிகுந்த அழுத்தங்களுக்கு இடையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதால், அது முழுமை பெறாத ஆவணமாக உள்ளது.இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பது குறித்து, விவாதிக்க வேண்டிய நேரம் இது. நீதிமன்றங்களில் மட்டுமில்லாமல் சட்ட பல்கலைக்கழகங்களிலும், அரசியல் அமைப்பு சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.விழாவில், சட்ட பல்கலை துணைவேந்தர் சந்தோஷ்குமார், பதிவாளர் கவுரி ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சட்ட பல்கலை மாணவர்கள், கவர்னர் முன்னிலையில் இந்திய அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்றனர்.
