பேராசிரியர்களுக்குள் மோதல்: மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்
பேராசிரியர்களுக்குள் மோதல்: மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம்
UPDATED : நவ 28, 2023 12:00 AM
ADDED : நவ 28, 2023 04:30 PM
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கடந்த 2011ம் ஆண்டு துவங்கப்பட்டது. இக்கல்லுாரியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிராமப்புற மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.துவக்கத்தில் கல்லுாரியில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வந்தது. இதனையடுத்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு திருவள்ளுவர் பல்கலைக் கழகம் மூலம் நேரடியாக கல்லுாரிக்கு பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். சிறுவங்கூரில் கல்லுாரி செயல்பட துவங்கியது முதல், அவ்வப்போது பிரச்னை ஒரு சில பேராசிரியர்கள், முதல்வர் இடையே மோதல் உருவானது.கல்லுாரி முதல்வருக்கு எதிராக ஒரு சில பேராசிரியர்கள் மறைமுகாக புகார்களை அனுப்பிய சம்பவமும் அரங்கேறியது. பல்கலைக் கழகத்திற்கு, மாணவர்கள் மூலமும் புகார்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.கல்லுாரி தேர்வு கட்டணம், மாணவர்கள் சேர்க்கை போன்ற பல்வேறு நிகழ்வுகளின் போது ஏற்படும் குறைபாடு காரணத்தைக் கொண்டு மாணவர்களை துாண்டிவிட்டு புகார் செய்யும் செயல்கள் ஆண்டுதோறும் அரங்கேறி வருகிறது. கல்லுாரியில் பேராசிரியர்களுக்குள் பனிப்போராக இருந்த பிரச்னைகள் தற்போது நேரடியாக மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது.கல்லுாரியில் ஆங்கில துறை பேராசிரியை, தங்களது துறை பேராசிரியர்கள், கல்லுாரி முதல்வர், மற்ற துறை பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்களை மிரட்டுவதும், மரியாதை குறைவான செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி பல்லைக் கழகத்திற்கு புகார் மனு அனுப்பி வைத்து கல்லுாரி வளாகத்தில் பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் கல்வித் துறை அதிகாரிகளின் செல்வாக்கு இருப்பதால் ஒரு சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே, கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில், உயர்கல்வித் துறை அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு தவறு செய்யும் பேராசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அனைத்து பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
