UPDATED : நவ 29, 2023 12:00 AM
ADDED : நவ 29, 2023 10:16 AM
பொங்கலுார்:
பொங்கலுார் பகுதியில் வட மாநிலத் தொழிலாளர்கள் கணிசமானோர் பனியன் நிறுவனங்கள், விவசாயம், உலர்களம் என பல இடங்களில் வேலை பார்த்து வருகின்றனர்.அவர்களிடையே பான்பராக், குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் பழக்கம் அதிகம் உள்ளது. போதை பொருட்கள் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தடை பெயரளவில் மட்டுமே உள்ளது ஆனால், வழக்கம் போல் இவற்றின் விற்பனை சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.அரசின் தடைக்கும் முன்பு ஒரு பொட்டலம் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது கடைக்காரர்கள், 50 ரூபாயாக விலையை உயர்த்தி விற்பனைசெய்து வருகின்றனர். இதில், நல்ல லாபம் கிடைப்பதால் வியாபாரிகள் இதன் விற்பனையை நிறுத்துவதில்லை. போலீசாரும் கண்டு கொள்வதில்லை. இதனால், கொடுவாய் பகுதி போதை பொருள் விற்பனையில் மையப் புள்ளியாக திகழ்கிறது.குறிப்பாக, பள்ளிகளை சுற்றிலும் இவற்றின் விற்பனை சக்கை போடுபோடுகிறது. பள்ளி மாணவர்கள் பலர் போதை வஸ்துக்களுக்கு அடிமையாகி வருவதாகவும், மாணவர் மத்தியில், ஒழுக்கக்கேடான பழக்கவழக்கங்கள் அதிகரித்து வருவது பெரிதும் வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுத்து, போதை பொருள் விற்பனையை தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
