கிராமப்புற மாணவர்களுக்காக கர்நாடகாவில் 1,000 பப்ளிக் பள்ளிகள்
கிராமப்புற மாணவர்களுக்காக கர்நாடகாவில் 1,000 பப்ளிக் பள்ளிகள்
UPDATED : நவ 29, 2023 12:00 AM
ADDED : நவ 29, 2023 10:22 AM
பெங்களூரு:
கர்நாடகாவின் கிராமப்பகுதியின் மாணவர்களுக்காக, வரும் ஆண்டு 1,000 கர்நாடக பப்ளிக் பள்ளிகள் துவங்க, அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து முறைப்படி கோரிக்கை அனுப்பும்படி கல்வித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக அரசு பிறப்பித்த உத்தரவு:
ஒவ்வொரு குழந்தையும் பள்ளியில் இருக்க வேண்டும். நன்றாக கல்வி கற்க வேண்டும் என்பது, அரசின் கொள்கை. நர்சரி முதல் 12ம் வகுப்பு வரை தரமான கல்வி வழங்கும் நோக்கில், 2018 - 19ம் ஆண்டில், கர்நாடக பப்ளிக் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில் கன்னடம், ஆங்கிலம் வழி கல்வி அளிக்கப்படுகிறது.பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தற்போது 285 கர்நாடக பப்ளிக் பள்ளிகள், வெற்றிகரமாக செயல்படுகின்றன. ஒரே கூரையின் கீழ், நர்சரி முதல் கல்வி அளிக்கும் நோக்கில், படிப்படியாக 1,000 கர்நாடக பப்ளிக் பள்ளிகளை அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது.மாநிலத்தில் ஏற்கனவே, சில மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகள், சங்க அமைப்பினர், கர்நாடக பப்ளிக் பள்ளிகள் திறக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனவே 2024 - 25ல், புதிதாக பப்ளிக் பள்ளிகள் திறக்க, அரசு முடிவு செய்துள்ளது.ஒரே வளாகத்தில், அரசு தொடக்க, உயர்நிலை பள்ளி, பி.யு.சி., கல்லுாரி இருக்க வேண்டும். இப்பள்ளி, கல்லுாரிகளில் 500 மாணவர்கள் இருக்க வேண்டும். இது போன்றுள்ள பள்ளி, கல்லுாரிகளை கர்நாடக பப்ளிக் பள்ளிகளாக மாற்றலாம்.ஒரே வளாகத்தில் பள்ளிகள் இல்லையென்றால், 500 மீட்டர் தொலைவில் அரசு தொடக்க, உயர்நிலைப் பள்ளி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 500 மாணவர்கள் இருந்தால், இவற்றை கர்நாடக பப்ளிக் பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேற்கூறியபடி அடையாளம் காணப்பட்ட பள்ளிகளுக்கு, அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். தகவல்களை சேகரித்து, அரசுக்கு முறைப்படி கோரிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
