UPDATED : பிப் 01, 2010 12:00 AM
ADDED : பிப் 01, 2010 11:46 AM
சென்னை: இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள், தமிழக அரசு சிறப்பு நடவடிக்கைகள் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து, அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் கீழ் வேலை வாய்ப்புத் துறையில், 34 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள், இரண்டு தொழில் மற்றும் செயல் வேலை வாய்ப்பு அலுவலகங்கள், ஒரு உடல் ஊனமுற்றோருக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம், ஐந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் வழிகாட்டும் நிலையங்கள் மற்றும் ஒரு பழங்குடியினருக்கான சிறப்புத் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகங்கள் உள்ளன.
இத்துறையில் ஏற்பட்ட அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கான காலியிடப் பதவிகள் சிறப்பு நடவடிக்கைகள் மூலம் நிரப்பப்பட்டுள்ளன. இத்துறைக்கு, 180 இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பதவிகள் அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் இடங்கள் அவ்வப்போது காலமுறைப்படி நிரப்பப்பட்டுள்ளன. நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் இடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படுகின்றன.
இப்பதவியேற்ற பின்னர், ஏற்கனவே இத்துறையில் 80 பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமும், 31 பணியிடங்கள் கருணை அடிப்படையிலும் நிரப்பப்பட்டுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற தேர்வாணையத் தேர்வு போட்டிகள் மூலம் 23 பேர் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பதவிக்கு தேர்வு பெற்றுள்ளனர். அவர்களில் 22 பேருக்கு இந்நிகழ்ச்சி மூலம் பணியமர்த்தல் ஆணைகள் தற்போது வழங்கப்படுகின்றன.
இவர்களில் ஒன்பது பேர் உடல் ஊனமுற்றவர்களுக்கென உள்ள சிறப்புப் பிரிவுகளில் பணியமர்த்தப்படுகின்றனர். நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ள 22 நபர்களையும் சேர்த்து 102 நபர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமும், 31 நபர்கள் கருணை அடிப்படையிலும், ஆக மொத்தம் 133 நபர்கள் இத்துறையில் புதிதாக நியமனம் பெற்றுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
