பாரத மொழிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும்
பாரத மொழிகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும்
UPDATED : டிச 01, 2023 12:00 AM
ADDED : டிச 01, 2023 05:11 PM
தொண்டாமுத்தூர்:
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை, அனைத்து பாரத மொழிகளிலும் உருவாக்க வேண்டும் என ஓலா நிறுவனத்தின் நிறுவனர் பவிஷ் அகர்வால் ஆலோசனை தெரிவித்துள்ளார்.சத்குரு அகாடமி சார்பில், இன்சைட் என்ற வர்த்தக மேம்பாட்டு நிகழ்ச்சி, கடந்த 23ம் தேதி, கோவை ஈஷா யோகா மையத்தில் துவங்கியது. 4 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 18 நாடுகளைச் சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட வளர்ந்து வரும் தொழில் முனைவோர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், தொழில் முனைவோர் சந்திக்கும் பல்வேறு சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து, இந்தியாவின் முன்னணி வர்த்தக தலைவர்கள் பலர் சிறப்புரையாற்றினர். அதன் ஒரு பகுதியாக, ஓலா நிறுவனத்தின் நிறுவனர் பவிஷ் அகர்வால், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மின்சார வாகன வர்த்தகம் குறித்து, சத்குருவுடன் கலந்துரையாடினார்.அப்போது, பவிஷ் அகர்வால் கூறுகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உருவாக்கும் துறையில், தொழில் முனைவோர்களுக்கு சிறந்த வர்த்தக வாய்ப்பு உள்ளது. தற்போது இருக்கும் பெரும்பாலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள், இணையத்தில் உள்ள வெளிநாட்டு மொழிகளில் உள்ள தரவுகளை கொண்டே இயங்குகின்றன.இதை மாற்றுவதற்கு, இந்திய மொழிகளில் அதிக தரவுகள், இணையத்தில் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். சாமானிய மக்களும் பயன்படுத்தும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பங்களை, அனைத்து பாரத மொழிகளிலும் உருவாக்க வேண்டும்.லித்தியம் பேட்டரியின் மின்சார சேமிப்பு திறன்களை, அதிகரிப்பதன் மூலம் எதிர்காலத்தில் வர்த்தக விமானங்களைக்கூட, மின்சார தொழில்நுட்பத்தின் மூலம் இயக்கும் சாத்தியம் உள்ளது, என்றார்.
