போட்டி தேர்வு எழுதி கலெக்டர், எஸ்.பி.,யாகி அரசியலுக்கு வராதீங்க!
போட்டி தேர்வு எழுதி கலெக்டர், எஸ்.பி.,யாகி அரசியலுக்கு வராதீங்க!
UPDATED : டிச 01, 2023 12:00 AM
ADDED : டிச 01, 2023 05:14 PM
பொள்ளாச்சி:
மாணவியர் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும். எங்களை அடையாளமாக கொண்டு அரசியலுக்கு வர வேண்டாம். அரசு போட்டித்தேர்வுகள் எழுதி, கலெக்டர், எஸ்.பி., போன்ற உயர் பதவிகளுக்கு வர வேண்டும் என அமைச்சர் முத்துசாமி பேசினார்.பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வரவேற்றார். மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் தலைமை வகித்தார்.வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் முத்துசாமி தலைமை வகித்து பேசியதாவது:
தமிழக முதல்வர் ஒவ்வொரு திட்டத்தையும் கொண்டு வரும் போது, திட்டம் கொண்டு வருவதால் பிரச்னைகள் தீருமா என விசாரித்து அமல்படுத்துகிறார். ஏதோ ஒரு திட்டம், ஆளுங்கட்சிக்கு பெயர் கிடைக்கும் என்பதற்காக செய்வதில்லை.பொருளாதாரம் தடையாக இல்லாமல், உயர்கல்வி பயிலும் வகையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இது, மாணவர்கள் உயர்கல்வி பயில உதவுகிறது. இதனால், கல்லுாரி படிப்புக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.ஆரம்ப பள்ளியில் காலை உணவுத்திட்டம், மாணவர்கள் கல்வி பயில்வதற்காக கொண்டு வரப்பட்டது. மாணவியர் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும். உங்களுக்கு அடையாளமாக இங்கு பலர் இருக்கின்றனர்.எங்களை அடையாளமாக கொண்டு அரசியலுக்கு வர வேண்டாம். அரசு போட்டித்தேர்வுகள் எழுதி, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., போன்ற உயர் பதவிகளுக்கு வர வேண்டும். மாணவர்கள் எந்த துறையில் திறமையானவர்கள் என கண்டறிந்து அதற்கேற்ப பயிற்சி அளிக்க வேண்டும். மாணவர்கள் தேவையில்லாமல், ஆப்சென்ட் ஆவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, மாணவியருக்கு சைக்கிள் மற்றும் பேனா வழங்கினார். மொத்தம், 192 சைக்கிள்கள் வழங்கப்பட்டன. பள்ளி நிர்வாகத்தினர், நகராட்சி நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.
