குரூப் - 4 பணிக்கு கல்வித்தகுதி நிர்ணயம் திருத்தம் செய்ய உத்தரவு
குரூப் - 4 பணிக்கு கல்வித்தகுதி நிர்ணயம் திருத்தம் செய்ய உத்தரவு
UPDATED : டிச 02, 2023 12:00 AM
ADDED : டிச 02, 2023 09:59 AM
மதுரை:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் 135 சமையல்காரர்கள் பணி நியமனத்திற்காக தேர்வு அறிவிப்பு 2020ல் வெளியானது.விண்ணப்பதாரர்கள் தமிழ் படிக்க, எழுத தெரிந்திருக்க வேண்டும். வயது 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.தகுதியானவர்கள் திருச்சி மாவட்டத்திலுள்ள எஸ்.சி., எஸ்.டி., மாணவர் விடுதிகளில் சமையல்காரர்களாக 2021 ஜன., 22ல் நியமிக்கப்பட்டனர்; 2022 டிச., 16ல் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து சிலர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.அந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, அதிக தகுதி பெற்றுள்ளனர் எனக்கூறி நியமனத்தை ரத்து செய்தது செல்லாது என உத்தரவிட்டார். இதை எதிர்த்து, ஆதிதிராவிடர் நலத்துறை கமிஷனர், திருச்சி கலெக்டர் மேல் முறையீடு செய்தனர். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர்.கலைமதி அமர்வு அந்த மனுவை விசாரித்தது.அரசு தரப்பில் கூறப்பட்டதாவது:
சமையல்காரர் பணிக்கு சிறப்பு விதிகளின் கீழ் எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10ம் வகுப்பு தோல்வி தான் கல்வித் தகுதி. தேர்வாகி, நியமனம் செய்யப்பட்டவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேல் உயர்கல்வியை தகுதியாக கொண்டவர்கள். இவர்கள் சமையல்காரர் பணி நியமனம் பெற தகுதியற்றவர்கள்.தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் தரப்பில், விளக்கமளிக்க வாய்ப்பளிக்கவில்லை. பணி நீக்க உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது என விவாதம் நடந்தது.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
குரூப் - 4 பணியில் அதிக தகுதியுடையவர்களை நியமிக்கும் தற்போதைய நிலை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. எனவே, குரூப் - -4 பணிக்கான தேர்வு, நியமனத்திற்கு குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித் தகுதியை நிர்ணயிக்க வேண்டியது அவசியம்.கூடுதல் தகுதியுள்ள நபர்கள் சிறிய சாதாரண வேலைகளுக்கு தகுதியற்றவர்கள் என இந்த நீதிமன்றம் கருதவில்லை. இருப்பினும் பொது வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு வழங்குவது அரசியலமைப்பு சட்டப்படி அவசியமானது. சமீப கால வேலைவாய்ப்புகளில் முதுகலை, தொழிற்கல்வி பட்டங்கள் பெற்றவர்கள் சிறிய பணிகளில் அதிகளவில் உள்ளனர். தனி நீதிபதியின் உத்தரவு மாற்றியமைக்கப்படுகிறது.தேர்ந்தெடுக்கப்பட்ட அதிக தகுதியுடையவர்களை சமையல்காரர் பணியில் சேர அனுமதிக்க வேண்டும். அடிப்படை பணிக்கான சிறப்பு விதிகளை மீறி, அதிக வயதுடையவர்களை தேர்வு, நியமனம் செய்தது சட்ட விரோதம். இவ்வாறு உத்தரவிட்டனர்.
